பெங்களுரூவில் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்த வாலிபர்கள்; போலீசார் கைது செய்து விசாரணை


பெங்களுரூவில் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்த வாலிபர்கள்; போலீசார் கைது செய்து விசாரணை
x
தினத்தந்தி 14 March 2022 8:57 PM GMT (Updated: 2022-03-15T02:28:40+05:30)

பெங்களூருவில் இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்த வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

  பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று முன்தினம் இந்தியா தனது பேட்டிங்கை முடித்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து இலங்கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர்.

  முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்பட இந்திய அணியினர் பீல்டிங் செய்து கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் விராட் கோலியை பார்த்து உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் 4 பேர் கம்பி வேலியை தாண்டி மைதானத்துக்குள் குதித்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக குதித்தனர்.

விராட் கோலியுடன் செல்பி

  அவர்கள் நேராக விராட் கோலியை நோக்கி ஓடினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் மைதானத்திற்குள் ஓடி விராட் கோலியிடம் சென்றனர். பின்னர் அவர்கள் விராட் கோலியிடம் செல்பி எடுக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். விராட் கோலியும் அவர்களை இன்முகத்துடன் அழைத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார்.

  அதையடுத்து அந்த வாலிபர்கள் பூரிப்படைந்து அங்கிருந்து மீண்டும் இருக்கைக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து இருக்கை பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

கைது

  இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மைதானத்துக்குள் குதித்த 4 வாலிபர்கள் மீது பெங்களூரு கப்பன் பூங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். இதுபற்றி மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரையும் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கைதான 4 பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் இல்லை. ஒருவர் மைதானத்துக்குள் புகுவதை பார்த்து அடுத்தடுத்து மற்றவர்கள் நுழைந்துள்ளனர்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

  இந்த நிலையில் பெங்களூரு போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்துக்குள் ரசிகர்கள் நுழைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக போலீசாருக்கு பி.சி.சி.ஐ. கடிதம் அனுப்பி இருக்கிறது.

  இச்சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்விஷயத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story