இரவில் பணி முடிந்து 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞரை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்..!!


இரவில் பணி முடிந்து 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞரை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்..!!
x
தினத்தந்தி 21 March 2022 10:44 AM GMT (Updated: 2022-03-21T16:14:20+05:30)

தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞரின் வீடியோ சமீபத்தில் வைரலானது.

லண்டன்,

உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19).  இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில்  இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது.

ஆனால், மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை.  அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார்.

ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 மணிக்கு எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என்பதால் காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும்   அவர் தெரிவித்து இருந்தார்.

10 கிலோமீட்டர் இவர் ஓடி செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதீப் மெஹ்ரா ஓடும் வீடியோவை பகிர்ந்து "இன்றைய காலை பொழுதை இது சிறப்பாகியுள்ளது ! என்ன ஒரு மனிதர் !" என பதிவிட்டுள்ளார்.

கெவின் பீட்டர்சனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story