யுவராஜ் சிங்கிற்கு எதிராக வீசிய ஒரு பந்து என் வாழ்க்கையை மாற்றியது- சென்னை வீரர் டிவைன் பிராவோ


யுவராஜ் சிங்கிற்கு எதிராக வீசிய ஒரு பந்து என் வாழ்க்கையை மாற்றியது- சென்னை வீரர் டிவைன் பிராவோ
x
தினத்தந்தி 31 March 2022 12:53 PM GMT (Updated: 2022-03-31T18:23:30+05:30)

இந்திய அணிக்கு எதிராக வீசிய அந்த ஒரு பந்து தன் வாழ்க்கையை மாற்றியதாக பிராவோ தெரிவித்துள்ளார்.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் ஆல்ரவுண்டரான டிவைன் பிராவோ தனது வாழ்க்கையை மாற்றிய கிரிக்கெட் நிகழ்வு குறித்து பேசியுள்ளார். 

உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் பிராவோ இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அணியை காப்பாற்றுவதில் திறமை வாய்ந்தவர்.

2006 ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது நடந்த  2-வது ஒருநாள் போட்டியில் 198 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் யுவராஜ் சிங் களத்தில் இருந்தார். பிராவோ கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாச, அப்போதைய இளம் வீரரான பிராவோ, 2 பவுண்டரிகள் வழங்கியதற்கு அடுத்த பந்தை ஸ்லோ யார்க்கராக வீச, அதை சற்றும் எதிர்பார்த்திராத யுவராஜ் சிங், 93 ரன்னில் க்ளீன் போல்டானார்.

இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தான் யுவராஜ் சிங்கிற்கு வீசிய ஸ்லோ யார்க்கர் தான் தன் வாழ்க்கையையே மாற்றிய பந்து என்று பிராவோ கூறியுள்ளார்.

Next Story