களத்தில் டோனி செயல்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!!


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 1 April 2022 2:16 PM GMT (Updated: 2022-04-01T19:46:56+05:30)

கேப்டனாக ஜடேஜாவை நியமித்துவிட்டு டோனி செயல்படும் விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த சீசன் முதல் சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இது முன்னாள்  கேப்டன் டோனியின் முடிவு என அணி நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியின் போது சென்னை அணியின் பில்டிங் அனைத்தையும் டோனியே கவனித்து வந்தார். இது அவ்வப்போது மைதானத்தின் பெரிய திரையிலும் காண்பிக்கப்பட்டது.

அணியின் கேப்டனாக ஜடேஜாவை நியமித்துவிட்டு டோனி செயல்படும் விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " டோனிக்கு என்னை விட பெரிய ரசிகன் யாரும் இல்லை. சுபாவம் மற்றும் அவர் செய்யும் செயல்களால் நான் அவரது ரசிகன். ஆனால் இன்று களத்தில் நடந்தது எனக்கு சரியாகப்படவில்லை. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை நீங்கள் (டோனி) தான் எடுத்தீர்கள். அதன் பிறகு அணியை ஜடேஜாவை  முன்னெடுத்து செல்வதை பரிந்துரைத்துவிட்டு இப்போது நீங்கள் அவரை பின்னெடுத்து செல்கிறீர்கள்" என அவர் தெரிவித்தார்.

Next Story