ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 4 April 2022 5:53 PM GMT (Updated: 2022-04-04T23:23:43+05:30)

லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் சூழலில் சிக்கினார்.

அனுபவ வீரர் மனிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற ஒரு கட்டத்தில் லக்னோ அணி  68 ரன்களுக்கு  3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தொடக்க வீராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடி வந்த அணியின் கேப்டன் ராகுல் , தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

தீபக் ஹூடா 51 ரன்னிலும் கேப்டன் ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் படோனி - ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடி காட்ட லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

170 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர்.

அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மார்க்ரம் 12 ரன்களில் க்ருனால் சுழலில் சிக்கினார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் - நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர்.  சிறப்பாக விளையாடி வந்த பூரன் 34 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்தப் பந்திலே அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது . இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

Next Story