தீபக் சாஹருக்கு மீண்டும் காயம் - ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகல்? சிக்கலில் சி.எஸ்.கே! சோகத்தில் ரசிகர்கள்!!


தீபக் சாஹருக்கு மீண்டும் காயம் - ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகல்? சிக்கலில் சி.எஸ்.கே! சோகத்தில் ரசிகர்கள்!!
x
தினத்தந்தி 12 April 2022 9:33 AM GMT (Updated: 2022-04-12T15:03:20+05:30)

தீபக் சாஹர் இல்லாமல் போனால் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

மும்பை,

இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த நிலையில், சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது, தீபக் சாஹருக்கு தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது. இதனால் பந்துவீசிக் கொண்டிருந்தபோது பாதியிலேயே வெளியேறினார்.

அதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்த போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இருந்து முற்றிலும் அவர் விலகுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ பி எல் ஏலத்தில் ரூ.14 கோடிக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட வீரரும் இவர்தான். 

நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் கீழ் ஏற்கெனவே தள்ளாடி வரும் நிலையில் தீபக் சாஹர் இல்லாமல் போனால்  அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

இந்த சோக செய்தி சென்னை அணியை மட்டுமல்ல அதன் லட்சக்கணக்கான ரசிகர்களையும் கன்னத்தின் மீது  கையை வைக்கச் செய்துள்ளது.

ஐ.பி.எல் 2022ல் விளையாடிய 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில்   10வது இடத்தில் உள்ளது. 

தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் மோதவுள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை தோல்வியுற்றால் அது அந்த அணிக்கு ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 5வது தொடர் தோல்வியாக அமைந்துவிடும்.

4வது வெற்றியை ருசிக்கப் போகிறதா ஆர்சிபி? அல்லது முதல் வெற்றியை பெற்று மீண்டெழப் போகிறதா சிஎஸ்கே.? என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிய வரும்.

Next Story