ஐ.பி.எல். போட்டி: டெல்லி வீரருக்கு கொரோனா; புனே பயணம் ஒத்திவைப்பு


ஐ.பி.எல். போட்டி:  டெல்லி வீரருக்கு கொரோனா; புனே பயணம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 April 2022 7:56 AM GMT (Updated: 2022-04-18T13:26:46+05:30)

ஐ.பி.எல்.லில் டெல்லி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அணியின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.புனே,ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வீரர் ஒருவருக்கு இன்று காலை நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  அவர் வெளிநாட்டை சேர்ந்த வீரர் என கூறப்படுகிறது.

அவருக்கு தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.  இதனை தொடர்ந்து, புனே புறப்பட தயாராக இருந்த டெல்லி அணியை நிறுத்தி வைக்கும்படி அணி நிர்வாகத்திற்கு பி.சி.சி.ஐ. அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.  மற்றோர் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவு வரும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளது.

ஒருவேளை அந்த முடிவில், தொற்று உறுதியானால், அவர் டெல்லி அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 3வது நபர் ஆவார்.  இதற்கு முன் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹார்டுக்கு கடந்த வெள்ளி கிழமை கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

அதற்கு அடுத்த நாள், அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி விளையாட உள்ளது.

இந்நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான சூழலில், டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


Next Story