கங்குலி கேட்ட ஒரு கேள்வி.. இரவு முழுவதும் தூங்காமல் இருந்த யுவராஜ்..!! - சுவாரசிய நிகழ்வு

யுவராஜ் தனது முதல் சர்வதேச போட்டிக்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக கருதப்பட்ட இவர் இந்திய அணியின் பல முக்கியமான வெற்றிகளுக்கு தனது பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்.
குறிப்பாக 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் முக்கிய காரணம். அந்த தொடரின் தொடர் நாயகன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
2000-ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியின் ஐசிசி நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் முதல் போட்டியில் இளம் வீரராக களமிறங்கிய யுவராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
அந்த போட்டியில் அவர் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி அந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் "ஹோம் ஆப் ஹீரோஸ்" நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் தனது முதல் சர்வதேச போட்டிக்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.
கங்குலி உடன் நடந்த உரையாடல் குறித்து அவர் கூறுகையில், " நாளைய போட்டியில் தொடக்க வீரராக களமிறக்குகிறாயா என கங்குலி என்னிடம் கேட்டார். உங்கள் விருப்பம் அதுவென்றால் நான் தொடக்க வீரராக இறங்குகிறேன் என தெரிவித்தேன். அதன்பிறகு அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை " என யுவராஜ் தெரிவித்தார்.
இருப்பினும் மறுநாள் கங்குலி யுவராஜ் சிங்கை 5-வது விக்கெட்டுக்கு களமிறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story