ஐபிஎல்: குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா பஞ்சாப்? இன்று மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 May 2022 11:47 PM GMT (Updated: 2 May 2022 11:47 PM GMT)

ஐபிஎல்லில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

மும்பை.

அறிமுக அணியான குஜராத் அணி அபாரமாக செயல்பட்டு அசத்தி வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அந்த அணி 4-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுடன் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பையும் நெருங்கி விட்டது. குஜராத் அணி இக்கட்டான சுழ்நிலையில் பதற்றமின்றி செயல்பட்டு வெற்றி இலக்கை கடப்பதில் கச்சிதமாக செயல்படுகிறது. அந்த அணியில் இதுவரை 7 வீரர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர். அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு வீரர் விசுவரூபம் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறார். பேட்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா (308 ரன்கள்), டேவிட் மில்லர் (276 ரன்கள்), சுப்மான் கில் (260 ரன்கள்) ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (14 விக்கெட்), லோக்கி பெர்குசன் (10 விக்கெட்), ரஷித் கான் ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.

மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான் (307 ரன்கள்), லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால், பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் அவர்கள் போதுமான அளவுக்கு தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விடுகிறார்கள். இது அந்த அணிக்கு பாதகமாக போய் விடுகிறது. எனவே அந்த அணி பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் காஜிசோ ரபடா, ராகுல் சாஹர் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

பஞ்சாப் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 190 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் ராகுல் திவேதியா தொடர்ச்சியாக விளாசிய சிக்சரின் உதவியுடன் குஜராத் அணி இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் அணி மல்லுக்கட்டும். ஆதிக்கம் செலுத்தி வரும் குஜராத் அணியின் சவாலை பஞ்சாப் அணி சமாளிக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story