நடப்பு ஐபிஎல்-லில் மிகப்பெரிய சிக்சரை அடித்த லிவிங்ஸ்டன் - பிரம்மித்து போன எதிரணி வீரர்கள்- வைரல் வீடியோ


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 4 May 2022 5:46 AM GMT (Updated: 4 May 2022 5:46 AM GMT)

லிவிங்ஸ்டன் அடித்த சிக்சரை கண்ட எதிரணி வீரர்கள் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.  பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்களில்  2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முகமது ஷமி வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஆட்டத்தை முடித்தார் பஞ்சாப் வீரர் லியாம்  லிவிங்ஸ்டன் . அனுபவ பவுலரான ஷமியின் அந்த ஓவரில் 6, 6,6, 4,2,4 என மொத்தமாக 28 ரன்களை லிவிங்ஸ்டன் விளாசினார். 10 பந்துகளை மட்டுமே சந்தித்த லிவிங்ஸ்டன் 30 ரன்களை விளாசினார் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

16வது ஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த  ஒரு சிக்சர் 117 மீட்டர் தூரத்திற்கு சென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதற்கு முன் மும்பை அணி வீரர் ப்ரேவிஸ் அடித்த 112 மீட்டர் என்ற மிகப்பெரிய சிக்சர் சாதனையை தற்போது லிவிங்ஸ்டன் முறியடித்துள்ளார்.

இவர் அடித்த சிக்சரை கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள், வர்ணனையாளர்கள் , எதிரணி வீரர்கள் உட்பட அனைவரும் ஒரு கணம் பிரம்மித்து போனார்கள்.

அதே நேரத்தில் ஐபிஎல் வரலாற்றில் நீண்ட தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர்களின் பட்டியலில் லியாம் லிவிங்ஸ்டன் 8-வது இடத்தில் உள்ளார் .இதற்கு முன் 125மீ - ஆல்பி மார்க்கெல் 124 மீ - பிரவீன் குமார் 122 மீ - ஆடம் கில்கிறிஸ்ட் 120மீ - ராபின் உத்தப்பா 119 மீ - கிறிஸ் கெயில் 119 மீ - யுவ்ராஜ் சிங் 119 மீ - ராஸ் டெய்லர் ஆகியோர் உள்ளனர்.

Next Story