தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்பாசன குளங்கள் வறண்டன 45 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்பாசன குளங்கள் வறண்டன 45 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2016 8:00 PM GMT (Updated: 2016-12-13T16:55:01+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றுப்பாசன குளங்கள் தண்ணீரின்றி வறண்டதால், 45 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றுப்பாசன குளங்கள் தண்ணீரின்றி வறண்டதால், 45 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பணைகள்

பொதிகை மலையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி நதியானது தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த நதியின் குறுக்கை கட்டப்பட்டுள்ள வல்லநாடு மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மருதூர் அணையில் இருந்து மேலக்கால், கீழக்கால் மூலமும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் மூலமும் ஏராளமான குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

தென்கால் பாசன குளங்கள்

ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் மூலம் கடம்பாகுளம், ஆத்தூரான் கால்வாய், சேதுக்குவாய்த்தான், நல்லூர் மேலகுளம், நல்லூர் கீழகுளம், ஆறுமுகநேரி, அம்மன்புரம், கானம், நாலாயிரமுடையார்குளம், நத்தகுளம், சீனிமாவடிகுளம், எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையார்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் மூலம் ஆறுமுகமங்கலம், பேய்க்குளம், பெட்டைகுளம், கோரம்பள்ளம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, கொற்கை, அகரம், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலக்கால், கீழக்கால்

மருதூர் அணையின் மேலக்கால் மூலம் முத்தாலங்குறிச்சி, ஆவரைகுளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி, கருங்குளம், வெள்ளூர், கால்வாய், வெள்ளமடம், பிள்ளையன்மனை, ஆதிநாதபுரம், மளவராயநத்தம், தென்கரைகுளம், செம்பூர்குளம், சடையநேரி, தாங்கைகுளம், புத்தன்தருவை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

மருதூர் அணையின் கீழக்கால் மூலம் ஸ்ரீவைகுண்டம், பேரூர், பேட்மாநகரம், சிவகளை, பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை, பற்பநாதமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆறாம்பண்ணை, மணக்கரை, கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் மூலம் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தென்கால் மூலம் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மருதூர் அணையின் கீழக்கால் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மேலக்கால் மூலம் சுமார் 2 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையில் அனைத்து அணைகளும், குளங்களும் நிரம்பி வழிந்தன. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.

குளங்கள் வறண்டன

இந்த ஆண்டில் போதிய பருவமழை பெய்யாததால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் கால்வாசி அளவுக்குகூட தண்ணீர் இல்லை. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கின்றன. ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைகளிலும் குறைந்த அளவே தண்ணீர் தேங்கி உள்ளது. மாவட்டத்தின் பிரதான குளங்களான கடம்பாகுளம், பெருங்குளம், சடையநேரி, புத்தன்தருவைகுளம் உள்ளிட்ட அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு விட்டன. இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பி எந்த விவசாயிகளும் விவசாய பணிகளை தொடங்கவில்லை.

விவசாயிகள் கோரிக்கை

மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களும் தண்ணீரின்றி கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, மழையின்றி கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story