‘வார்தா’ புயல் காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதி


‘வார்தா’ புயல் காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Dec 2016 11:00 PM GMT (Updated: 13 Dec 2016 12:58 PM GMT)

வேலூரில் ‘வார்தா’ புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். ‘வார்தா புயல்’ சென்னையில் நேற்று முன்தினம் ‘வார்தா’ புயல்

வேலூர்,

வேலூரில் ‘வார்தா’ புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

‘வார்தா புயல்’

சென்னையில் நேற்று முன்தினம் ‘வார்தா’ புயல் தாக்கியது. சென்னையை தாக்கிய பின்னர் புயல் வேலூர் மாவட்டத்தையும் தாக்கியது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் மிதமான மழையே பெய்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதையடுத்து சுமார் 11 மணிக்கு மேல் பலத்த காற்று மட்டும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசியது. மேலும் சில இடங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. இந்த பலத்த காற்றினால் மரங்களும், மின்கம்பங்களும், விளம்பர பலகைகளும், டிஜிட்டல் பேனர்களும் சாய்ந்து விழுந்தன. வேலூர் மக்கான் சிக்னல் வடக்கு போலீஸ் நிலையம் அருகே கொணவட்டம் செல்லும் சாலையில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

வேலூர் தொரப்பாடி பெண்கள் ஜெயில் அருகே மரம் வேரோடு சாய்ந்தது. தோட்டபாளையம் துர்க்கையம்மன் கோவில் அருகே மரங்கள் சாய்ந்தன. காட்பாடியில் சாலையோரம் உள்ள பெரும்பாலான மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் காட்பாடி– வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பின்னர் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

நேதாஜி விளையாட்டு மைதானம்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்தது. வேலூர், காட்பாடி, தொரப்பாடி, அடுக்கம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வேலூரில் தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

வேலூர் காட்பாடி ரோட்டில் உள்ள டி.பி.கிருஷ்ணசாமி தெருவில் மழைநீர் தேங்கியது. மேலும் சில கடைகளிலும், குடோன்களிலும் மழைநீர் புகுந்தது. இதையடுத்து நேற்று காலையில் கடைக்கு வந்த உரிமையாளர்கள், கடைக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றினர்.

கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வீட்டிற்குள் புகுந்தது. கொணவட்டம் அருகே உள்ள திடீர்நகர் பகுதியிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. சில பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்

அடுக்கம்பாறை அடுத்த மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தது. ஒரு மின்கம்பம் பாதி உடைந்த நிலையில் வயரில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் மின்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் மின்இணைப்பை துண்டித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் குமார், பொறியாளர் பாலசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். மழைநீர் புகுந்த பகுதிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story