பணத்தை திருப்பி கொடுக்காததால் சிறுமியை திருமணம் செய்து தரக் கேட்டு மிரட்டியவர் கைது


பணத்தை திருப்பி கொடுக்காததால் சிறுமியை திருமணம் செய்து தரக் கேட்டு மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 13 Dec 2016 1:19 PM GMT)

கொடுத்த பணத்தை திருப்பி தராததால், சிறுமியை திருமணம் செய்துதரக் கேட்ட மிரட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தகராறு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முகம்மதுபசீர் மகன் முகம்மதுரபீக் (வயது 45). சமையல் வேலை செய்த

ராமநாதபுரம்,

கொடுத்த பணத்தை திருப்பி தராததால், சிறுமியை திருமணம் செய்துதரக் கேட்ட மிரட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தகராறு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முகம்மதுபசீர் மகன் முகம்மதுரபீக் (வயது 45). சமையல் வேலை செய்து வரும் இவர் மாயாகுளம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் முருகேசன்(44) என்பவரிடம் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினாராம்.

இந்த கடன் தொகையை முகம்மது ரபீக் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முகம்மதுரபீக்கின் வீட்டுக்கு சென்ற முருகேசன், தான் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு தற்போது பணம் இல்லை என்றும், விரைவில் தந்துவிடுவதாகவும் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் தகாத வார்த்தைகளால் பேசியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்து கொண்டிருந்த முகம்மது ரபீக்கின் 16 வயது மகள், 2 பேரையும் விலக்கி விட்டுள்ளார்.

சிறையில் அடைப்பு

அப்போது சிறுமியை பார்த்த முருகேசன், அவரை பிடித்து வைத்துக் கொண்டு, பணத்தை திருப்பி கொடுக்க முடியாவிட்டால், சிறுமியை திருமணம் செய்து தரக் கேட்டு மிரட்டியதோடு, சிறுமியை அழைத்து கொண்டு செல்ல முயன்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்த முகம்மது ரபீக் கத்தி கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்ட முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கேத்ரின்மேரி வழக்குபதிவு செய்து முருகேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். முருகேசனுக்கு திருமணமாகி உள்ள நிலையில், கொடுத்த பணத்திற்காக பல்வேறு இடங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story