பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு வலைவீச்சு


பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Dec 2016 9:30 PM GMT (Updated: 13 Dec 2016 2:26 PM GMT)

பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தலைமறைவான ஒர்க்ஷாப் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள். எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை நெல்லை பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுடலை

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தலைமறைவான ஒர்க்ஷாப் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவர் அதே பகுதியில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதியில் கார் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அந்த ஒர்க்ஷாப்பின் நுழைவு வாயில் நேற்று காலை திறந்து கிடந்தது. அங்கு ஒரு வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் மோப்ப நாய்

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அவர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. பின்னர் மீண்டும் ஒர்க்ஷாப்புக்கு திரும்பி வந்து நின்று விட்டது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–

கள்ளக்காதல்

கொலை செய்யப்பட்டவர் பாளையங்கோட்டை கக்கன் நகர் நேரு தெருவை சேர்ந்த மகேஷ்(வயது 27). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த மகேஷ் தொழில் விசயமாக அடிக்கடி சுடலையின் ஒர்க்ஷாப்பிற்கு சென்று வந்தார். அப்போது சுடலையின் மனைவியிடம் மகேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

முதலில் சாதாரணமாக பழகி வந்த இந்த பழக்கம் பின்னர் இருவருக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. தனது மனைவியுடன் மகேசுக்கு தவறான தொடர்பு இருப்பது சுடலைக்கு தெரிய வந்ததும் அவர் மகேசை கண்டித்துள்ளார். தனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு அவர் மகேசிடம் கூறி வந்துள்ளார். ஆனாலும் மகேஷ், சுடலை மனைவியிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

தலைமறைவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுடலையின் ஒர்க்ஷாப்பில் மகேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். எனவே தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் சுடலை ஆத்திரம் அடைந்து மகேசை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தவிர இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஒர்க்ஷாப் உரிமையாளர் சுடலை நேற்று முன்தினம் இரவு முதல் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சுடலை மனைவியையும், அந்த பகுதியை சேர்ந்த சிலரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் மகேசின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஒர்க்ஷாப் உரிமையாளர் சுடலை பிடிபட்டால்தான் இந்த கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மகேசுக்கு விஜி என்ற மனைவியும், மாரி செல்வி என்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

சாலை மறியல்

இந்த கொலை குறித்த தகவல் அறிந்த கக்கன் நகர் பகுதி பொதுமக்கள் கொலை நடந்த ஒர்க்ஷாப்புக்கு திரண்டு வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மகேசின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர் வசித்து வரும் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மகேஷ் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒர்க்ஷாப்பிற்கு தீ வைப்பு

மகேஷ் கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒர்க்ஷாப் உரிமையாளர் சுடலையை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மகேஷின் உறவினர்கள், மகேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்த சுடலையின் ஒர்க்ஷாப்பிற்கு சென்று ஒர்க்ஷாப்பிற்கு தீ வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் செல்வசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story