ஓசூரில் பரபரப்பு பிறந்த பெண் குழந்தையை ரூ.200–க்கு விற்ற தாய் போலீசார் விசாரணை


ஓசூரில் பரபரப்பு பிறந்த பெண் குழந்தையை ரூ.200–க்கு விற்ற தாய் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2016 11:00 PM GMT (Updated: 13 Dec 2016 4:11 PM GMT)

ஓசூரில் பிறந்த பெண் குழந்தையை ரூ.200–க்கு தாய் விற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூலித்தொழிலாளி தம்பதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி பக்கமுள்ள வானமங்கலத்தை சேர்ந்தவர் மயூரியப்பா. இவரது மனைவி திம்மக்கா (வயது 4

ஓசூர்,

ஓசூரில் பிறந்த பெண் குழந்தையை ரூ.200–க்கு தாய் விற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூலித்தொழிலாளி தம்பதி

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி பக்கமுள்ள வானமங்கலத்தை சேர்ந்தவர் மயூரியப்பா. இவரது மனைவி திம்மக்கா (வயது 46). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் திம்மக்கா மீண்டும் கர்ப்பமானார்.

அவர் கடந்த 8–ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மதியம் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர்கள் அவரிடம் விவரம் கேட்டனர். அப்போது திம்மக்கா தனக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது பிறந்துள்ளது 7–வது குழந்தை என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து 11–ந் தேதி அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

ரூ.200–க்கு குழந்தை விற்பனை

இந்த நிலையில் திம்மக்கா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடந்த 10–ந் தேதி மாயமானார். இதையடுத்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் தளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் வானமங்கலம் கிராமத்திற்கு நேற்று சென்றனர். அங்கு திம்மக்காவிடம் அவர்கள் குழந்தை குறித்து விசாரித்தனர். அப்போது திம்மக்கா குழந்தையுடன் தான் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஓசூர் பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கு இருந்த எல்லம்மா என்ற பெண்ணிடம் ரூ.200–க்கு குழந்தையை விற்று விட்டு தான் வானமங்கலத்திற்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

பெரும் பரபரப்பு

இதைக்கேட்டு தளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரசவத்தை தொடர்ந்து திம்மக்கா குழந்தையை உண்மையிலேயே ரூ.200–க்கு விற்றாரா? அல்லது குழந்தையை கொன்று நாடகமாடுகிறாரா? என்பது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில் பிறந்த பெண் குழந்தையை ரூ.200–க்கு அதன் தாயே விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story