அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் போது கிரேன் உடைந்து விபத்து


அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் போது கிரேன் உடைந்து விபத்து
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-14T00:02:05+05:30)

அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் போது ராட்சத கிரேன் உடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நடைமேடை மேம்பாலம் திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில் தண்டவாளத்தில், திண்டுக்

சின்னாளபட்டி

அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் போது ராட்சத கிரேன் உடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நடைமேடை மேம்பாலம்

திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில் தண்டவாளத்தில், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக அம்பாத்துரை ரெயில் நிலையம் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் மார்க்கத்தில் 2 தண்டவாளங்களும், மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் மார்க்கத்தில் 2 தண்டவாளங்களும் இங்கு உள்ளன.

ரெயில் நிலையம் நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ், அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. நேற்று 4 தண்டவாளங்களுக்கு இடையே இரும்பிலான நடைபாதையை தூக்கி வைப்பதற்காக ராட்சத கிரேன் மூலம் பணி நடந்தது. அந்த கிரேன் சுமார் 60 டன் எடை கொண்டதாகும்.

உடைந்த கிரேன்

ராட்சத கிரேன் மூலம் சுமார் 20 டன் எடை கொண்ட இரும்பிலான நடைமேடையை தூக்கி மேம்பாலத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. அப்போது சுமார் 30 அடி உயரம் தூக்கியபோது, எதிர்பாராத விதமாக நடைமேடை அங்கும் இங்குமாக இழுத்தது. இதனை தாங்க முடியாத கிரேனின் பின்புற சக்கரங்கள் சுமார் 10 அடி உயரத்துக்கு தூக்கியது.

இதற்கிடையே எதிரே இருந்த பணியாளர் குடியிருப்பு வீட்டை உடைத்து கொண்டு நடைமேடை தரையில் விழுந்தது. இதனை கண்ட ஊழியர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க திரண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் ராட்சத கிரேனை தாங்கி கொண்டிருந்த ‘சேஸ்‘ உடைந்து விபத்துக்குள்ளானது.

இதற்கிடையே ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை அறிந்த கிரேன் டிரைவர் அதில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதற்கிடையே அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த 2 சிறிய கிரேன்கள் மூலம் ராட்சத கிரேன் சரிந்து விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இல்லையெனில் தண்டவாளத்தில் விழுந்து பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவத்தினால் அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிரமம் அடைந்த பயணிகள்

அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பால பணியை மேற்கொள்ள காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில் பாதையில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த ரெயில் பாதையில் செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

ஆனால் காலை 10 மணிக்கு தொடங்கிய பணி மதியம் 1 மணி ஆன பிறகும் முடிவடையவில்லை. இதனால் கூடுதலாக மேலும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே மதியம் 1½ மணி அளவில் வந்த கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில், 3–வது தண்டவாளத்தில் இயக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த தண்டவாள பகுதியில், நடைமேடை இல்லாததால் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் 2–வது நடைமேடையில் இருந்து இறங்கி 3–வது தண்டவாளத்துக்கு வந்தனர். இதனால் ரெயிலில் ஏறுவதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். அதன்பின்னர் மதியம் 3 மணிக்கு பிறகு 2–வது நடைமேடையில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது.


Next Story