கூடலூரில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரால் விபத்துகள் அதிகரிப்பு


கூடலூரில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரால் விபத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-14T00:13:59+05:30)

கூடலூர்- கோழிக்கோடு சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரால் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தடுப்புச்சுவர் நீலகிரி- கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் உள்ளது. இதனால் சுற்றுலா வே

கூடலூர்,

கூடலூர்- கோழிக்கோடு சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரால் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தடுப்புச்சுவர்

நீலகிரி- கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் உள்ளது. இதனால் சுற்றுலா வேன்கள், லாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டி மற்றும் கேரளா, கர்நாடகாவுக்கு இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகராக விளங்கு கிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக கோழிக்கோடுக்கு சாலை செல்கிறது. திருச்சூர், கோட்டயம், பெருந்தல்மன்னா, பாலக்காடு, நிலம்பூர் மற்றும் கோழிக்கோடு பகுதிக்கு கர்நாடகாவில் இருந்து லாரிகள் மூலம் கூடலூர் வழியாக அத்தியாவசிய பொருட் கள் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கூடலூர்- கோழிக்கோடு சாலையில் லாரிகள் அதிகளவு வந்து செல்கின்றன.

விபத்துகள்

இதனிடையே கோழிக்கோடு சாலையில் கடந்த 2008-ம் ஆண்டு கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் துப்புக்குட்டிபேட்டை வரை சாலையின் நடுவில் பல லட்ச ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் சாலை அகலம் குறைவாக உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படும் என்று டிரைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஏற்ப கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், லாரிகள் நள்ளிரவு முதல் அதிகாலை நேரத்தில் ரோட்டின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் அடிக்கடி மோதி விபத்தில் சிக்கி வருகின்றன.

தடுப்புச்சுவரில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் கொண்ட பலகைகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

லாரி மோதியது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கேரளாவில் இருந்து நெல் கழிவு (உமி) மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகாவுக்கு லாரி ஒன்று கூடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர் துப்புக்குட்டிபேட்டைக்கு வந்த போது ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் பலகைகள் இல்லாததால் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் லாரி மோதியது. இதில் லாரியின் ஒருபக்க சக்கரங்கள் தடுப்புச்சுவரில் ஏறி அந்தரத்தில் நிற்பது போல் நின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் சாலையின் ஒரு புறம் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியை அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

போராட்டம்

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் உஸ்மான் உள்பட அந்த பகுதி மக்கள் கூறும்போது, கூடலூரில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரால் அடிக் கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் கொண்ட பலகைகள் பொருத்தப்பட வில்லை. இதனால் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Next Story