தாராபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் 1.67 ஏக்கர் நிலம் அபகரிப்பு ரியல் எஸ்டேட் புரோக்கர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு


தாராபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் 1.67 ஏக்கர் நிலம் அபகரிப்பு ரியல் எஸ்டேட் புரோக்கர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-14T00:34:12+05:30)

தாராபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் 1.67 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 7 பேர் மீது திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்

திருப்பூர்,

தாராபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் 1.67 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 7 பேர் மீது திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–

1.67 ஏக்கர் நிலம்

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் ஸ்ரீவெங்கடாசலபதி நகரை சேர்ந்த முருகனின் மனைவி தனலட்சுமி (வயது 68). இவர் திருப்பூர் நில அபகரிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது தந்தை சீனிவாசுலு மற்றும் அவருடைய சகோதரர்கள் 3 பேருக்கு சொந்தமாக தாராபுரம் நேதாஜி வீதியில் 1.67 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர்கள் பாகப்பிரிவினையும் செய்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரை சேர்ந்த ரத்தினசபாபதி (68) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம், எனது தந்தை வாங்கிய கடனுக்காக பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்தார். பின்னர் கடனை அடைத்து அந்த ஆவணத்தை ரத்து செய்துவிட்டார்.

போலி ஆவணங்கள்

இந்தநிலையில் எங்களுக்கு சொந்தமான அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ரத்தினசபாபதி, தனது மாமனார் ராமசாமிக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இதுதொடர்பாக தாராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அந்த கிரையம் செல்லாது என்று ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. ஆனால் அதை மறைத்து ராமசாமியின் மகளும், ரத்தினசபாபதியின் மனைவியுமான பத்மாவதிக்கு(63), அவருடைய சகோதரி மகேஷ்வரி(60), சகோதரர் சண்முக சுந்தரம்(58) ஆகியோர் தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் அந்த 1.67 ஏக்கர் நிலத்துக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்.

இதற்கு பத்திர எழுத்தர் முரளிதரன்(60) மற்றும் சாட்சிகள் கண்ணன்(49), குமாரசாமி(47) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த ரத்தினசபாபதி, அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

7 பேர் மீது வழக்கு

மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில், ரத்தினசபாபதி, அவருடைய மனைவி பத்மாவதி, பத்மாவதியின் சகோதரி மகேஷ்வரி, சகோதரர் சண்முகசுந்தரம், பத்திரஎழுத்தர் முரளிதரன் மற்றும் சாட்சிகள் கண்ணன், குமாரசாமி ஆகியோர் மீது திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story