வார்தா புயல் எதிரொலி: ரெயில்கள் ரத்து–தாமதம் காரணமாக பயணிகள் அவதி


வார்தா புயல் எதிரொலி: ரெயில்கள் ரத்து–தாமதம் காரணமாக பயணிகள் அவதி
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-14T00:46:51+05:30)

வார்தா புயல் எதிரொலியாக ஈரோடு வழியாக வரும் ரெயில்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகள் அவதிப்பட்டனர். ரெயில்கள் ரத்து வங்கக்கடலில் உருவாகிய வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னையில் கரையை கடந்தது. அப்போது சென்னை மாநகரமே பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக

ஈரோடு,

வார்தா புயல் எதிரொலியாக ஈரோடு வழியாக வரும் ரெயில்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகள் அவதிப்பட்டனர்.

ரெயில்கள் ரத்து

வங்கக்கடலில் உருவாகிய வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னையில் கரையை கடந்தது. அப்போது சென்னை மாநகரமே பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை வழியாக செல்லும் ரெயில்களும் தாமதமாகின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்து அவதிப்பட்டனர்.

ஈரோடு ரெயில் நிலையம் வழியாக சென்னைக்கு செல்லும் பல ரெயில்கள் நேற்று முன்தினமும், நேற்றும் ரத்து செய்யப்பட்டன.

தாமதம்

சில ரெயில்கள் தாமதமாக சென்றன. மங்களூர் –சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ரெயில், கோவை–சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஐதராபாத் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.50 மணிக்கு வரவேண்டியது நேற்று இரவு வந்து சேர்ந்தது.

இதுபோல் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் 7 மணி நேரம் தாமதமாக வந்தது. நள்ளிரவு வரவேண்டிய மெயில் எக்ஸ்பிரஸ் மாலை 4 மணிக்கு வந்தது. நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் மிகவும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘நிலமை சீரடைந்து வருகிறது. இன்று (நேற்று) இரவுக்குள் ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாளை (இன்று) வழக்கமான நேரத்தில் அனைத்து ரெயில்களும் இயக்கப்படும்’ என்றனர்.

உறவினர்கள் காத்திருப்பு

நேற்று ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பயணத்துக்காக முன்கூட்டியே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் பலரும் ரெயில் நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு மையங்களில் கொடுத்து ரத்து செய்து பணத்தை திரும்பப் பெற்றனர்.

ஏற்கனவே ரெயில்களில் புறப்பட்டு சென்னை வரவேண்டியவர்களை தேடி உறவினர்கள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தனர். அவர்கள் ரெயில்கள் எப்போது வரும் என்று விசாரணை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இதனால் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story