பெலகாவி அருகே பயங்கரம் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை பணத்தகராறில் தந்தை வெறிச்செயல்


பெலகாவி அருகே பயங்கரம் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை பணத்தகராறில் தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 Dec 2016 8:43 PM GMT (Updated: 2016-12-14T02:13:05+05:30)

பெலகாவி அருகே பணத்தகராறில் ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவருடைய தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பணத்தகராறு பெலகாவி மாவட்டம் பைலஒங்காலா டவுன் நயாநகரில் வசித்து வருபவர்

பெங்களூரு

பெலகாவி அருகே பணத்தகராறில் ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவருடைய தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பணத்தகராறு

பெலகாவி மாவட்டம் பைலஒங்காலா டவுன் நயாநகரில் வசித்து வருபவர் விட்டல் இண்டி. இவருடைய மனைவி அனுசியா. இந்த தம்பதிக்கு ஈரண்ணா (வயது 21) என்ற மகனும், பிரீத்தி (17) என்ற மகளும் இருந்தனர். ராணுவ வீரரான ஈரண்ணா பெங்களூருவில் உள்ள எம்.இ.எஸ். ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், விடுப்பு எடுத்து கொண்டு ஈரண்ணா நேற்று முன்தினம் இரவு நயா நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

இரவு நேரத்தில் வீட்டில் அமர்ந்து அவர் சாப்பிட முயன்றார். அப்போது, வீட்டுக்கு வந்த அவருடைய தந்தை விட்டல் இண்டிக்கும், ஈரண்ணாவுக்கும் இடையே திடீரென்று பண விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின்போது ஈரண்ணாவுக்கு அவருடைய தாய் மற்றும் தங்கை ஆதரவு தெரிவித்தனர்.

ராணுவ வீரர் சுட்டுக் கொலை

இதனால், ஆத்திரமடைந்த விட்டல் இண்டி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக 3 பேரையும் நோக்கி சுட்டார். அப்போது, துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டுகள் ராணுவ வீரர் ஈரண்ணா, அவருடைய தாய் அனுசியா மற்றும் தங்கை பிரீத்தி ஆகியோர் மீது பாய்ந்தது. இதில், குண்டு காயம் அடைந்த ஈரண்ணா, அனுசியா மற்றும் பிரீத்தி ஆகியோர் குண்டு காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விட்டல் இண்டி அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு பைலஒங்காலா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஈரண்ணாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாறாக, அனுசியா மற்றும் பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் 2 பேரும் பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில் பைலஒங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விட்டல் இண்டியை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் பைலஒங்கலாவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.Next Story