கிருஷ்ணராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதல்; புதிய தமிழகம் கட்சி பிரமுகர் - மகன் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு


கிருஷ்ணராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதல்; புதிய தமிழகம் கட்சி பிரமுகர் - மகன் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2016 11:00 PM GMT (Updated: 13 Dec 2016 8:51 PM GMT)

கிருஷ்ணராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதல்; புதிய தமிழகம் கட்சி பிரமுகர் - மகன் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் புதிய தமிழகம் கட்சி பிரமுகரும், அவருடைய மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தை- மகன் பலி

கிருஷ்ணராயபுரம் மலையப்பகாலனியை சேர்ந்தவர் நல்லதம்பி(வயது 55). கருவாடு வியாபாரி. புதிய தமிழகம் கட்சி பிரமுகராக இருந்தார். இவருடைய மகன் கிருபாகரன்(20). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்துள்ளார். இந்த நிலையில் தந்தையும், மகனும் ஒரு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணராயபுரத்தில் இருந்து மாயனூரை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

திருக்காம்புலியூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த மணல் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நல்லதம்பியும், கிருபாகரனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலை மறியல்

இதனை அறிந்த நல்லதம்பியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் திருக்காம்புலியூரில் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் 2 வாகனங்கள் செல்லும் போது, மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் ஒதுங்கி நிற்க முடியவில்லை. இதனால் இந்த கழிவுநீர் கால்வாயை சாலை மட்டத்திற்கு சமமாக அமைக்க வேண்டும். மேலும், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மணல் குவாரிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர்- திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாயனூர் (பொறுப்பு) சிவசுப்பிரமணி, குளித்தலை குருநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் அதிகாரிகள் கூறுகையில், இன்னும் 15 நாட்களில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சாலை மட்டத்திற்கு சமமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மாயனூர் போலீசார் நல்லதம்பி, கிருபாகரன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story