10 மாத பெண் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் சாவு அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பியது


10 மாத பெண் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் சாவு அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பியது
x
தினத்தந்தி 13 Dec 2016 9:15 PM GMT (Updated: 2016-12-14T02:45:06+05:30)

10 மாத பெண் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் உயிரிழந்தார். அவரது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. குழந்தையுடன் குதித்த பெண் மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணிக்கு குர்லாவில் இருந்து வாஷி நோ

மும்பை

10 மாத பெண் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் உயிரிழந்தார். அவரது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

குழந்தையுடன் குதித்த பெண்

மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணிக்கு குர்லாவில் இருந்து வாஷி நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலின் பெண்கள் பெட்டியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தார்.

ரெயில் மான்கூர்டு– வாஷி இடையே உள்ள கடல்வழி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த பெண் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார்.

பெண் சாவு

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெட்டியில் இருந்த மற்ற பெண் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடினர்.

சுமார் 4½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அங்குள்ள கழிமுகப்பகுதியில் சகதியில் சிக்கிய நிலையில் பெண்ணும், அவரது குழந்தையும் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜவாடி மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது.

மனநலம் குன்றிய குழந்தை

தலையில் பலத்த காயமடைந்துள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண் நவிமும்பை நெருலை சேர்ந்த ரசிகா கேம்கர்(வயது30) என்பதும், உயிர் தப்பிய அவரது குழந்தையின் பெயர் அனன்யா என்பதும் தெரியவந்தது.

ரசிகா கேம்கர் தனது கணவருடன் புனேயில் வசித்து வந்தார். அனன்யா பிறந்து 10 மாதமே ஆகிறது. குழந்தை மனநலம் குன்றிய நிலையில் இருந்து உள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ரசிகா கேம்கர் கணவரிடம் கோபித்து கொண்டு நெருலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்தநிலையில், தான் அவர் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரசிகா கேம்கரின் தந்தை தத்தா திவே புகார் கொடுத்து உள்ளார்.Next Story