மந்திரி மகாதேவ் ஜன்கரை பதவிநீக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி மராட்டிய சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


மந்திரி மகாதேவ் ஜன்கரை பதவிநீக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி மராட்டிய சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2016 9:21 PM GMT (Updated: 2016-12-14T02:51:28+05:30)

மந்திரி மகாதேவ் ஜன்கரை பதவிநீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நேற்று மராட்டிய சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மகாதேவ் ஜன்கர் உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சிரோலி மாவட்டம் தேசாய்கஞ்ச் நகரசபையில் காங்கிரஸ் கட்சிய

நாக்பூர்

மந்திரி மகாதேவ் ஜன்கரை பதவிநீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நேற்று மராட்டிய சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மகாதேவ் ஜன்கர்

உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சிரோலி மாவட்டம் தேசாய்கஞ்ச் நகரசபையில் காங்கிரஸ் கட்சியின் டிக்கெட்டில் போட்டியிடும் குறிப்பிட்ட வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு தேர்தல் அதிகாரியிடம் பால்வளத்துறை மந்திரி மகாதேவ் ஜன்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இதற்கான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில தேர்தல் கமிஷனரிடம் அளித்த புகாரின்பேரில், மந்திரி மகாதேவ் ஜன்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

பரபரப்பான இந்த தருணத்தில், 3 நாள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மராட்டிய சட்டசபை நாக்பூரில் கூடியது. சபை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, மந்திரி மகாதேவ் ஜன்கர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தினர்.

மேலும், மாநில தேர்தல் ஆணையத்தால் குற்றம்சுமத்தப்பட்ட ஒருவர், எப்படி மந்திரி பதவியில் நீடிக்க முடியும்? என்று காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வடேட்டிவர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து, மந்திரி மகாதேவ் ஜன்கரை பதவிநீக்கம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

பட்னாவிஸ் ஆதரவு

இருந்தாலும், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் ஹரிபாவு பக்டே அனுமதிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சட்டசபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடியதும், மந்திரி மகாதேவ் ஜன்கருக்கு ஆதரவாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். அவர் கூறுகையில், ‘மகாதேவ் ஜன்கருக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுகள் பதிவு ஆகவில்லை. மேலும், தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு அவர் பதில் அனுப்பிவிட்டார். ஆகையால், இந்த பிரச்சினையை மேற்கொண்டு கிளற தேவையில்லை’’ என்றார்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், காகிதங்களை கிழித்து அவையில் எறிந்தனர். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இறுதியில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த யோகேஷ் சாகர், சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். எதிர்க்கட்சியினரின் கூச்சல், குழப்பத்தால் நேற்று சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story