கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள்


கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T01:06:25+05:30)

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலையில் 4 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நில ஆர்ஜிதம் செய்யப்படாததால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. ரூ.21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கோவையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்காக நகருக்குள் வரும் ரெயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோ

கோவை

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலையில் 4 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நில ஆர்ஜிதம் செய்யப்படாததால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

ரூ.21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம்

கோவையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்காக நகருக்குள் வரும் ரெயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, இருகூர், பீளமேடு, வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டன.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மெயின் ரோட்டில் ரூ.21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக 28 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் கடந்த 30.1.2013 அன்று தொடங்கப்பட்டது. அந்த பாலம் அமையும் இடத்திற்கு இரண்டு பக்கமும் சேவை சாலை அமைப்பதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை.

துருப்பிடித்த இரும்பு கம்பிகள்

இதனால் அந்த சாலையின் இரண்டு புறமும் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு ரெயில்வே மேம்பால கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டன. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி கான்கிரீட் தூண்கள் அமைத்து அதன் மேல் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பாலத்தின் இரண்டுபுறமும் சேவை சாலை அமைப்பதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்த பின்னர் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரெயில்வே மேம்பால கான்கிரீட் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகின்றன. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

நெருக்கடி

எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரெயில்வே கேட்டுக்கு ஒரு பக்கத்தில் இந்திய உணவு கழக அலுவலகம் உள்ள பகுதியில் இணைப்பு மேம்பால பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இதற்கு காரணம் அங்கு சேவை சாலை அமைப்பதற்கான நிலத்தை இந்திய உணவு கழகத்திடம் இருந்து ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது.

ஆனால் பாலத்தின் மற்றொரு பகுதியில் தான் தனியாருக்கு சொந்தமான நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும். பாலத்துக்கு இரண்டு பக்கமும் சேவை சாலை அமைப்பதற்கான நிலம் இல்லாததால் பாலத்தின் தூண்கள் வீட்டு காம்பவுண்டு சுவர் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியே கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எஸ்.ஐ.எச்.எஸ். சாலையை அடைத்து பாலம் கட்டப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை

ரெயில்வே மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் சேவை சாலை அமைப்பதற்கான நிலத்தை இந்த பகுதி மக்கள் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கான விலையை நிர்ணயிப்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாங்கள் மார்க்கெட் மதிப்பில் இழப்பீடு கேட்கிறோம். ஆனால் அதை தர மாவட்ட நிர்வாகம் தயாராக இல்லை. மேலும் ஆர்ஜிதம் செய்யப்படும் நிலத்துக்கான விலையை நிர்ணயம் செய்வதிலும் மாவட்ட நிர்வாகம் தெளிவான முடிவை எடுப்பதில்லை. இதனால் இந்த பிரச்சினையில் இழுபறி நீடிப்பதால் பாலம் கட்டுமான பணிகள் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியவில்லை. 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் இங்குள்ள தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல வரும் வாகனங்களும் பள்ளிக்கூடத்துக்கு அருகில் வர முடியவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் சிறிது தூரம் நடந்துதான் வாகனங்களில் செல்கிறார்கள். ரெயில்வே மேம்பால பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூடவர முடியாத அளவிற்கு சாலையின் நடுவில் பாலத்தின் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதை சுற்றி வாகனங்கள் செல்வதற்கு இடம் இல்லை. எனவே பொதுமக்களுக்கு பல வழிகளிலும் சிரமத்தை கொடுக்கும் இந்த ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story