3 ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கு; வெளிநாடு தப்பி சென்ற வாலிபர் விமான நிலையத்தில் கைது


3 ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கு; வெளிநாடு தப்பி சென்ற வாலிபர் விமான நிலையத்தில் கைது
x
தினத்தந்தி 14 Dec 2016 9:45 PM GMT (Updated: 2016-12-15T01:54:30+05:30)

கீழக்கரையில் தோப்பு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பு சத்துணவு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளிநாடு தப்பி சென்ற வாலிபர் திரும்பி வந்தபோது நேற்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சத்துணவு ஊழியர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது கும்பிடுமதுரை. இந்த ஊரை சேர்ந்த வேலு என்பவரின் ம

ராமநாதபுரம்,

கீழக்கரையில் தோப்பு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பு சத்துணவு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளிநாடு தப்பி சென்ற வாலிபர் திரும்பி வந்தபோது நேற்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சத்துணவு ஊழியர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது கும்பிடுமதுரை. இந்த ஊரை சேர்ந்த வேலு என்பவரின் மனைவி ஆறுமுகம் (வயது 51). இவர் மங்களேஸ்வரி நகர் மீனவர் குடியிருப்பு தொடக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். கீழக்கரை நல்லஇபுராகீம் என்பவருக்கு சொந்தமான முல்லை நகர் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி இரவு ஆறுமுகம் தோப்பு பகுதியில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக அவருடைய மகன் கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தகவல் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதன்படி கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி 3 ஆண்டுகளுக்குபின் இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மகனான புகார்தாரர் கணேசனின் மனைவி முருகசுந்தரியின் சகோதரர்கள் ஏர்வாடி வடக்குத்தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன்கள் வடிவேல் முருகன்(28), அவருடைய தம்பி ராமர்(22) ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியான வடிவேல்முருகனின் தாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர்ராஜை பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டாராம். இதற்கு ஆறுமுகம் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்தின்மீது வடிவேல்முருகன் மற்றும் ராமருக்கு கோபம் இருந்துள்ளது. இந்த நிலையில் தங்களது அக்காள் முருகசுந்தரியை ஆறுமுகத்தின் மகன் கணேசனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்களாம்.

இதன்பின்னர் முருகசுந்தரியை ஆறுமுகம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தாராம். மேலும், தவறான நடவடிக்கைக்கு உட்படுத்த முயன்றாராம். மாமியாரின் கொடுமை குறித்து முருகசுந்தரி தனது சகோதாரர்களிடம் கூறி அழுதுள்ளார். அக்காளின் மனவேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேறுவழியின்றி ஆறுமுகத்தை தீர்த்துக்கட்ட சகோதாரர்கள் இருவரும் திட்டமிட்டனர்.

கொலை

இதன்படி கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி இரவு அண்ணன், தம்பி இருவரும் மதுஅருந்திவிட்டு ஆறுமுகம் தங்கியிருந்த தோப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் மதுபோதையில் படுத்திருந்தாராம். அவரை எழுப்பியபோது எழுந்திருக்காததால் படுத்த நிலையிலேயே கொலை செய்ய திட்டமிட்டுஉள்ளனர்.

இதன்படி அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து 2 முறை தலையில் போட்டுஉள்ளனர். இதில் தலைநசுங்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனை தொடர்ந்து அங்கு தடயங்களை மறைப்பதற்காக மிளகாய் பொடியை தூவிய இருவரும் ரத்தம் படிந்த கல்லை அருகில் இருந்த கிணற்றில் போட்டுவிட்டனர்.

மேலும், திருட்டிற்காக நடந்த கொலை என்பது போல் சித்தரிப்பதற்காக ஆறுமுகத்தின் செல்போன் போன்றவற்றை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். கொலை சம்பவம் நடந்த பின்னர் போலீசாரின் கவனம் தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் மீது இருந்ததால் கொலையாளிகள் இருவரும் எந்த அச்சமும் இன்றி இருந்ததோடு இருவரும் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த வடிவேல்முருகன் பணத்தேவைக்காக ஆறுமுகத்திடம் திருடிய செல்போனை திருப்பூரில் ஒரு பெண்ணிடம் விற்பனை செய்துள்ளார். அந்த செல்போனின் தகவல் அடிப்படையில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

கைது

ஆறுமுகத்தை கொலை செய்தது வடிவேல்முருகன் மற்றும் அவருடைய தம்பி ராமர் என்பதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வடிவேல்முருகனை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். வெளிநாடு தப்பி சென்றிருந்த ராமரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். துபாய் நாட்டில் வேலை பார்த்து வந்த ராமரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று காலை ராமர் விமானம் மூலம் சென்னை வந்தார். இவரின் பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்த விசாரணை அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, பூமுத்து ஆகியோர் சென்னை சென்று விமான நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ராமரை கைது செய்தனர்.


Next Story