தீப்பெட்டி ஆலைகளுக்கான படைக்கல சட்ட உரிமத்தை புதுப்பிக்க தாமதம் ஆவதால் உற்பத்தி பாதிக்கும் நிலை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


தீப்பெட்டி ஆலைகளுக்கான படைக்கல சட்ட உரிமத்தை புதுப்பிக்க தாமதம் ஆவதால் உற்பத்தி பாதிக்கும் நிலை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T02:04:30+05:30)

தீப்பெட்டி ஆலைகளுக்கான படைக்கல சட்ட உரிமத்தினை புதுப்பிக்க தாமதம் ஆவதால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது. உரிமம் இது குறித்து கலெக்டரிடம் சாத்தூர் தொழில்முனைவோர் சங்க தலைவர் பழனி குமார் கொடுத்துள்ள மனுவில் கூ

விருதுநகர்,-

தீப்பெட்டி ஆலைகளுக்கான படைக்கல சட்ட உரிமத்தினை புதுப்பிக்க தாமதம் ஆவதால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது.

உரிமம்

இது குறித்து கலெக்டரிடம் சாத்தூர் தொழில்முனைவோர் சங்க தலைவர் பழனி குமார் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தீப்பெட்டி ஆலைகள் இயங்குவதற்கு வருவாய்த்துறையிடம் இருந்து படைக்கல சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இந்த உரிமம் பெறப்பட்டு இருந்தால்தான் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான குளோரைடு மற்றும் கந்தகம் கொள்முதல் செய்யமுடியும். மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் வழங்கப்படும் இந்த உரிமம் மத்திய அரசின் படைக்கல சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உரிமத்தை புதுப்பிக்க தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விண்ணப்பிப்பது நடைமுறையாகும்.

தாமதம்

இந்த உரிமத்தை புதுப்பிக்க மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் இருந்து உரிமம் பெற்ற தீப்பெட்டி ஆலைகளுக்கு அக்டோபர் மாதம் இறுதியில் சுற்றறிக்கை அனுப்பப்படும். அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தான் தேவைப்படும் விவரங்களை தெரிவித்து உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் இருந்து இது வரை சுற்றறிக்கை ஏதும் அனுப்பி வைக்கப்படவில்லை.

இதனால் படைக்கல சட்டத்தின் கீழான உரிமத்தை புதுப்பிக்க தீப்பெட்டி ஆலைகள் விண்ணப்பிக்க முடியவில்லை. இந்த காலதாமதத்துக்கான காரணம் பற்றி விசாரித்த போது மத்திய அரசு படைக்கல உரிமசட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதாகவும், அது பற்றி விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு எழுதி உள்ளதாகவும் அந்த விளக்கம் வந்தவுடன் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து விட்டனர்.

பாதிக்கும்நிலை

தீப்பெட்டி ஆலைகளுக்கான படைக்கலசட்ட உரிமத்தை புதுப்பிக்க தாமதம் ஆனால் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய முடியாமல் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும். இதனால் தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். எனவே கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு தீப்பெட்டி ஆலைகளுக்கான படைக்கல உரிம சட்டத்தினை புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story