சேலம் உடையாப்பட்டியில் வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்


சேலம் உடையாப்பட்டியில் வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 14 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-15T02:35:36+05:30)

சேலம் உடையாப்பட்டியில் வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

சேலம்,

சேலம் உடையாப்பட்டியில் வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கிகளில் கூட்டம்

சேலம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்க நேற்று கூட்டம் அலைமோதியது. காலை முதலே பால் உற்பத்தியாளர்கள், வயதானவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு திரண்டனர். கடந்த 12-ந் தேதி (திங்கட்கிழமை) வங்கிக்கு வந்தவர்களில் சிலருக்கு பணம் இல்லை என்றதால், அவர்களுக்கு டோக்கன் கொடுத்து நேற்று வங்கிக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, டோக்கன் வைத்திருந்த 50 பேரும் நேற்று வங்கிக்கு வந்து காத்திருந்தனர். அப்போது சரியாக காலை 9.30 மணிக்கு வங்கியை திறக்க அதிகாரிகள் வந்தனர். பின்னர், வங்கியில் தற்போது பணம் இல்லை என்றும், தலைமை அலுவலகம் சென்று தான் பணத்தை எடுத்து வர வேண்டும் என்றும், எனவே, வீட்டிற்கு சென்றுவிட்டு மாலையில் வருமாறும் அங்கிருந்த பொதுமக்களிடம் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கேட்டதும், அங்கு நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து வேண்டும் என்றே அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாகக்கூறி வங்கி எதிரே உள்ள சாலையில் பொதுமக்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வங்கியில் பணம் வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறினர். பிறகு அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். வங்கியில் இருந்த அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை வினியோகம் செய்தனர். வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story