மின்கம்பியில் இரும்பு தூண் உரசியதால் விபரீதம் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; 3 பேர் படுகாயம் ஆழ்துளை கிணறு தோண்ட முயன்ற போது சம்பவம்


மின்கம்பியில் இரும்பு தூண் உரசியதால் விபரீதம் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; 3 பேர் படுகாயம் ஆழ்துளை கிணறு தோண்ட முயன்ற போது சம்பவம்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T02:35:40+05:30)

மின்கம்பியில் இரும்பு தூண் உரசியதால் விபரீதம் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; 3 பேர் படுகாயம் ஆழ்துளை கிணறு தோண்ட முயன்ற போது சம்பவம்

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே ஆழ்துளை கிணறு தோண்ட முயன்ற போது மின்கம்பியில் இரும்பு தூண் உரசியது. இதனால் இரும்பு தூணை பிடித்திருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆழ்துளை கிணறு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவில் சீனிவாசா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு ஆழ்துளை கிணறு தோண்ட ஒப்பந்தக்காரர் கனி என்பவர் ஒப்புக்கொண்டார். இந்த பணிகளை செய்ய தன்னிடம் வேலை பார்க்கும் ஆட்களையும், தளவாட பொருட்களையும் நேற்று காலை சீனிவாசா நகருக்கு கனி அனுப்பி வைத்தார். அங்கு சென்ற தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கினர். கிணறு தோண்டுவதற்கு வசதியாக 3 இரும்பு தூண்களை பூமியில் நிலைநிறுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் தாங்கி பிடித்திருந்த இரும்புதூண் மேலே சென்ற மின்கம்பி மீது எதிர்பாராத விதமாக உரசியது. இதனால் இரும்பு தூண்கள் வழியாக மின்சாரம் தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர்கள் படுகாயமடைந்தனர்.

பரிதாப சாவு

படுகாயமடைந்தவர்களில் பழைய மாத்தூரை சேர்ந்த அய்யர் என்ற சுந்தரம் (வயது58) சம்பவ இடத்திலேயே இறந்தார். தண்டாங்கோரை வெளியாத்தூரை சேர்ந்த புண்ணியமூர்த்தி (43), கோபாலபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (45), ராமலிங்கம் மகன் கார்த்தி ஆகிய 3 பேரும் படுகாய மடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த தொழிலாளி அய்யர் என்ற சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளை கிணறு தோண்ட முயன்ற போது தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அய்யம்பேட்டை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story