கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: 1,800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; 3 மின்கம்பங்கள் சரிந்தன தர்மபுரியிலும் பரவலான மழை பெய்தது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: 1,800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; 3 மின்கம்பங்கள் சரிந்தன தர்மபுரியிலும் பரவலான மழை பெய்தது
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 14 Dec 2016 9:07 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: 1,800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; 3 மின்கம்பங்கள் சரிந்தன தர்மபுரியிலும் பரவலான மழை பெய்தது

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 1,800 வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. 3 மின்கம்பங்களும் சரிந்து விழுந்தது. இதேபோல தர்மபுரி மாவட்டத்திலும் பரவலான மழை பெய்தது.

பரவலான மழை

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த வார்தா புயல் கடந்த 12-ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழகத்தின் வழியாக செல்லும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதனால் வட தமிழகமான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவும் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. தொடர்ந்து இரவு மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து உஷார் நிலையில் இருந்தனர். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இருந்த போதிலும் பரவலாக மழை பெய்தது.

மின்கம்பங்கள் சரிந்தன

மேலும் கடந்த 2 நாட்களாக காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் குண்டலப்பட்டி ஊராட்சி எல்லுகுட்டை ஏரி அருகே உள்ளது சிவனாபுரம் கிராமம். நேற்று முன்தினம் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 3 மின்கம்பங்கள் அடியோடு சரிந்து விழுந்தன.

இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. அங்கு மின்வாரிய ஊழியர்கள் சென்று சரிந்து விழுந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாழை மரங்கள் சேதம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம் கால்வேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகாவாப்பட்டி கிராமத்திலும் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் சின்னகாவாப்பட்டியில் வெங்கடாசலம், கோவிந்தசாமி, ராஜா, காவேரி, காவேரியம்மாள், மாரியப்பன், மற்றொரு ராஜா ஆகிய விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 1,800 வாழை மரங்கள் சாய்ந்தன. இதன் சேத மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. சேதமடைந்த வாழை மரங்களை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்தனர். சேதமடைந்த தங்களின் பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தேன்கனிக்கோட்டை-11.6, அஞ்செட்டி-10.3, தளி-10, சூளகிரி-5, கிருஷ்ணகிரி-3.2, பாரூர்-3, ஊத்தங்கரை-2, நெடுங்கல்-2 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 47.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது.

தர்மபுரி

வங்கக்கடலில் உருவான வார்தா புயல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய பரவலான மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.

தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக லேசான மழை பெய்தது. நேற்று பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு தூறல்மழை பெய்தது. இந்த மழை காரணமாக தர்மபுரி நகரில் நேதாஜி பைபாஸ் சாலை, பென்னாகரம் சாலை என பல்வேறு பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் மழைநீர் தேங்கியது.

73.20 மி.மீ.மழை

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பென்னாகரத்தில் 19.40 மி.மீ. மழை பதிவானது. தர்மபுரியில் 10 மி.மீ., பாலக்கோட்டில் 8.50 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டியில் 2.80 மி.மீ.மழை பதிவானது. அரூரில் 9.20 மி.மீ. மழையும், ஒகேனக்கல்லில் 11 மி.மீ. மழையும், மாரண்டஅள்ளியில் 12.30 மி.மீ. மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதும் 73.20 மி.மீ. மழை பதிவானது.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தர்மபுரி மாவட்டத்தில் சில இடங்களில் காற்று வேகமாக வீசியதால் வாழை மரங்கள் மற்றும் நெற்பயிர்கள் சாய்ந்தன. நல்லம்பள்ளியில் ஒரு புளியமரம் சாய்ந்தது. அதை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றினர்.

Next Story