அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வங்கிகள்-ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது


அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வங்கிகள்-ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T02:37:36+05:30)

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வங்கிகள்-ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

அரியலூர்,

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

அலைமோதிய மக்கள் கூட்டம்

மிலாது நபி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் அரியலூர் மாவட்டத்தில் நேற்று வங்கிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்பட்டன. இதனால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவது, வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

அரியலூர், தா.பழூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில ஏ.டி.எம். மையங்களே திறந்து இருந்ததால் அங்கு பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் ரூ.2,000 நோட்டுகளாகவே வந்ததால் அதற்கு சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

வர்த்தகம் பாதிப்பு

வங்கிகளில் வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்த போதிலும், பெரும்பாலான வங்கிகளில் அது நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதுகுறித்து வங்கி பணியாளர்களிடம் கேட்டால், போதிய அளவு பணம் வங்கிகளில் கையிருப்பு இல்லை என்று கூறுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அரியலூர் மாவட்டத்தில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலும்...

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரு சில வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வங்கிகளில் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

வங்கிகளில் போதிய அளவு பணம் கையிருப்பு இல்லாததால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படாமல் இருந்தது. எனினும் பணம் நிரப்பப்பட்ட ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர்.

வேப்பந்தட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி மற்றும் அதன் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக தினமும் ஏராள மானவர்கள் வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வங்கியின் ஏ.டி.எம். செயல்படாததால் வங்கியில் மட்டுமே பணம் எடுக்க வேண்டியநிலை உள்ளது. இந்நிலையில் நேற்று வங்கியில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வங்கிக்குள் செல்வதற்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தி கூட்டத்தை சரிசெய்தனர்.

Next Story