நாகர்கோவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4¼ மணி நேரம் தாமதம் ஹவுரா, ஐலேண்ட், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதம்


நாகர்கோவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4¼ மணி நேரம் தாமதம் ஹவுரா, ஐலேண்ட், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதம்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:15 PM GMT (Updated: 14 Dec 2016 9:08 PM GMT)

நாகர்கோவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4¼ மணி நேரம் தாமதம் ஹவுரா, ஐலேண்ட், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதம்

நாகர்கோவில்,

நாகர்கோவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 4¼ மணி நேரம் தாமதமாக வந்தது. ஹவுரா, ஐலேண்ட், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதமாக வந்தன.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

வார்தா புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட சில ரெயில்கள் நேற்று முன்தினம் தாமதமாக புறப்பட்டன. அவ்வாறு தாமதமாக புறப்பட்ட ரெயில்களில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று.

இந்த ரெயில் வழக்கமான நாட்களில் காலை 6.15 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடையும். ஆனால் நேற்று இந்த ரெயில் 4¼ மணி நேரம் தாமதமாக அதாவது காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைந்தது. இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகளும், அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்களும், நண்பர்களும் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

ஹவுரா

இதேபோல் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரந்தோறும் புதன்கிழமை அன்று காலை 10.55 மணிக்கு வரும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு தாமதமாக வந்தது. பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் பிற்பகல் 2.25 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும். ஆனால் நேற்று இந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 4.25 மணிக்கு வந்தது. இந்த ரெயில் தான் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாலை 5.40 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த நிலையில் நேற்று ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்ததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 6.40 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.

நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 8.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். ஆனால் நேற்று இந்த ரெயில் பிற்பகல் 3.30 மணிக்கு தாமதமாக நாகர்கோவில் வந்து சேர்ந்தது.

திருக்குறள் எக்ஸ்பிரஸ்

இதைப்போன்று வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும். ஆனால் இந்த ரெயில் நேற்று 2.20 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

Next Story