தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி பெறும் வீடியோ வெளியீடு இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு


தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி பெறும் வீடியோ வெளியீடு இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 11:00 PM GMT (Updated: 14 Dec 2016 9:29 PM GMT)

Tamil Nadu - Kerala border Maoists getting arms training video output

கோவை,

தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி பெறும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம்

கேரளாவில் உள்ள பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்தப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ‘தண்டர்போல்டு’ என்ற சிறப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப்பகுதிகள் தமிழக-கேரள எல்லையில் இருப்பதால், அங்குள்ள வனப்பகுதியில் சுற்றித்திரியும் மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் வந்துவிடுவதை தடுக்க, தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

2 பேர் சுட்டுக்கொலை

இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வனப்பகுதியில், முகாமிட்டு இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்டு போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் குப்பு தேவராஜ், அஜிதா ஆகிய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

மேலும் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு இருந்த வனப்பகுதியில், துப்பாக்கிகள், தோட்டாக்கள், கட்டுக் கட்டாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள், காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்து-மாத்திரைகள், ஊசிகள், சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்குகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீடியோ வெளியீடு

இதற்கிடையே, தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி பெறும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோ, இணையதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. பச்சை நிற சீருடையுடன் மாவோயிஸ்டுகள் ஆயுதங்கள் ஏந்தி நிற்பதும், அவர்கள் மத்தியில் 2 பேர் பேசுவதும், 25 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் அதில் பதிவாகி இருக்கிறது.

மேலும் சிவப்பு நிறத்தில் ஒரு கொடி கட்டப்பட்டு உள்ளது. அந்த கொடியை சுற்றிலும் மாவோயிஸ்டுகள் நிற்கிறார்கள். அங்கு அவர்களுக்கு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். சுமார் 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணும் இருப்பதால் அவர் அஜிதாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே அவர் சுட்டு கொல்வதற்கு முன்பு தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

தமிழில் பேசுகிறார்

மேலும் அந்த வீடியோவில் ஒருவர் தமிழில் பேசுவது தெளிவாக பதிவாகி இருக்கிறது. மலைவாழ் மக்களுக்காகவே நாம் போராடுகிறோம். இதனால் மலைவாழ் மக்கள் பலர் நமக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இதனால் நம்மை யாரும் ஒழிக்க முடியாது. தற்போது மலைவாழ் மக்களை சேர்ந்த 3 பேர் நமது இயக்கத்தில் சேர்ந்து உள்ளனர். அவர்களை நாம் கை தட்டி வரவேற்போம்.

கேரள அரசு நம்மை ஒடுக்க நினைத்தாலும் முடியாது. மலைவாழ் மக்கள் நமக்கு ஆதரவு அளித்து வரும் வரை நம்மை யாராலும் அழிக்க முடியாது. ஆயுதத்துக்கு ஆயுதமே தீர்வு. எனவே நாம் ஆயுதத்தை ஏந்தி போராட எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நபர் வீடியோவில் தமிழில் பேசுகிறார். அப்போது மாவோயிஸ்டுகள் கோஷமிட்டனர்.

தீவிர ரோந்து

இந்த வீடியோவில் வரும் பகுதி தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோன்று கேரளாவை சேர்ந்த தண்டர்போல்டு போலீசார், தமிழகத்தை சேர்ந்த நக்சல் தடுப்பு போலீசார் வனப்பகுதியில் தீவிரமாக ரோந்து சென்று வருகிறார்கள். 

Next Story