தொடர் மின்தடை– ‘சர்வர்’ பிரச்சினை: வங்கி பணிகள் முடங்கின ‘டெபிட்’, ‘கிரெடிட்’ கார்டுகளையும் பயன்படுத்த முடியவில்லை


தொடர் மின்தடை– ‘சர்வர்’ பிரச்சினை: வங்கி பணிகள் முடங்கின ‘டெபிட்’, ‘கிரெடிட்’ கார்டுகளையும் பயன்படுத்த முடியவில்லை
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T03:45:02+05:30)

தொடர் மின்தடை, சர்வர் பிரச்சினையால் பெரும்பாலான வங்கிகளில் பணிகள் முடங்கி போனது. பணப்பரிமாற்றம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த மாதம் 8–ந் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. ப

சென்னை,

தொடர் மின்தடை, சர்வர் பிரச்சினையால் பெரும்பாலான வங்கிகளில் பணிகள் முடங்கி போனது.

பணப்பரிமாற்றம்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த மாதம் 8–ந் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே வங்கிகளில் பணம் எடுப்பதற்கு அடுத்தடுத்து புதிய வரம்புகள் விதிக்கப்பட்டன. பின்னர் அது சற்று தளர்த்தப்பட்டது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு போதுமான அளவு பணம் கொடுக்காததால் பணப்பரிமாற்றம் அடியோடு முடங்கியது.

கடுமையான கூட்டம்

பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் பணம் எடுக்க வருபவர்களுக்கு வங்கி கணக்கில் இருக்கும் கையிருப்பு தொகையை பொறுத்தே பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டு வாடகை, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

வார்தா புயல் மற்றும் மிலாது நபி அரசு விடுமுறைக்கு பின் வங்கிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து பணம் எடுப்பதற்கு காலை முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் வியாசர்பாடி, பெரம்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடுமையான கூட்டம் காணப்பட்டது.

‘சர்வர்’ பிரச்சினை

சில வங்கிகளில் ‘சர்வர்’ பிரச்சினையும் ஏற்பட்டது. செல்போன், இணையதள சேவையில் ஏற்பட்ட பாதிப்பால் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இதையடுத்து பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களை தேடி மக்கள் படையெடுத்தனர்.

ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் மூடிக்கிடந்தன. ‘வார்தா’ புயல் தாக்கமாக மின்சார சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார சப்ளை இல்லாமல் சில ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்கு நீண்ட வரிசை காணப்பட்டது. மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் பணம் எடுத்துச்சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

வங்கிகளில் நிலவும் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை பிராட்வே பகுதியில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புயல் தாக்கம் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கையிருப்பு பணம் இருந்தால் மட்டுமே குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து நாட்களை நகர்த்த முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை, பணமும் இல்லை என பொதுமக்கள் சந்தித்துவரும் இன்னல்கள் எண்ணில் அடங்காததாக உள்ளது. இதற்கு எல்லாம் தீர்வை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.


Next Story