தானேயில் ரூ.1 கோடியே 38 ஆயிரம் 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் மும்பையை சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் கைது


தானேயில் ரூ.1 கோடியே 38 ஆயிரம் 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் மும்பையை சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் கைது
x
தினத்தந்தி 14 Dec 2016 10:29 PM GMT (Updated: 14 Dec 2016 10:28 PM GMT)

தானேயில் ரூ.1 கோடியே 38 ஆயிரம் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். பணத்தட்டுப்பாடு நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த மாதம் 8–ந்தேதி

தானே

தானேயில் ரூ.1 கோடியே 38 ஆயிரம் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணத்தட்டுப்பாடு

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த மாதம் 8–ந்தேதி மத்திய அரசு செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த மறுநாளில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்காக மக்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். ஏ.டி.எம்.களில் நாளொன்றுக்கு 2,500 ரூபாய் நோட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

வரிசையில் நிற்கும் மக்கள்

மும்பையில் ஏ.டி.எம். எந்திரங்களில் பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே நிரப்பப்படுகிறது. புதிய 500 மற்றும் நூறு ரூபாய் நோட்டுகள் இருப்பதில்லை. இதற்கான அனுமதிக்கப்பட்ட 2,500 ரூபாயை கூட எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுப்பதற்கே ஏ.டி.எம். வாசலில் மக்கள் கால் கடுக்க நின்று வரும் நிலையில், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கும் சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

3 தொழில் அதிபர்கள் கைது

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தானேயில் அதிகளவில் 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாநகராட்சி மருத்துவமனை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, இந்த ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர்கள் மும்பை போரிவிலியை சேர்ந்த தொழில் அதிபர்கள் கவுரவ் பிஜ்ஜா(வயது49), ஹரிஷ் ராவுத்(38), சிந்தன் ரம்பியா(41) என்பது தெரியவந்தது.

ரூ.1 கோடியே 40 ஆயிரம்

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதிய நோட்டுகளை எண்ணி பார்த்தபோது, ரூ.1 கோடியே 38 ஆயிரத்துக்கான புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும், இரண்டாயிரத்துக்கான நான்கு புதிய 500 ரூபாய் நோட்டுகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது எப்படி? அந்த நோட்டுகளை தடை செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றி கொடுக்க வந்தார்களா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.



Next Story