அரக்கோணம் அருகே மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


அரக்கோணம் அருகே மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 15 Dec 2016 12:27 PM GMT)

அரக்கோணம் அருகே மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்கம்பங்கள் அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புயல் மழை காரணமாக பல மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்கம்பிகளின் மீது ம

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்கம்பங்கள்

அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புயல் மழை காரணமாக பல மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்கம்பிகளின் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தது. புயல் மழையால் உயிர்சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காக மின்சார வாரியம் சார்பில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

மழைக்கு பின்னர் மின்கம்பங்கள் சரி செய்வதற்கு அந்த பகுதிக்கு யாரும் செல்லவில்லை. மேலும் என்ன பாதிப்பு ஏற்பட்டது என அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

மின்தடை காரணமாக குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு மோட்டார் இயங்காமல் தண்ணீர் ஏற்றுவது தடைபட்டது.

சாலை மறியல்

இந்த நிலையில் வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரக்கோணம்– திருத்தணி சாலையில் நேற்று காலை மின்இணைப்பு, குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் காலி குடத்துடன் பல பெண்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அன்புச்செல்வி, காஞ்சனா, மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் லதா, பொறியாளர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது செயற்பொறியாளர் வடமாம்பாக்கம் பகுதியில் சாய்ந்து இருந்த மின்கம்பங்களை சரி செய்வதற்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 40 நிமிடம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் கல்லூரி, பள்ளி பஸ்களில் வந்த மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த சாலை மறியலால் நேற்று காலை அரக்கோணம்–திருத்தணி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story