செங்கம் அருகே வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


செங்கம் அருகே வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 15 Dec 2016 12:33 PM GMT)

செங்கம் அருகே வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் வங்கி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 நாட்களாக பணம் இல்லை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8–ந் தேதி மத்திய அர

செங்கம்,

செங்கம் அருகே வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் வங்கி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 நாட்களாக பணம் இல்லை

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.

பல ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் நிரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தேவையான பணம் எடுக்க வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கிறார்கள். சில வங்கிகளில் பொதுமக்களுக்கு குறைந்த அளவு பணமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25 கிராம மக்கள் கணக்கு வைத்துள்ளனர். மேலும் முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்ட ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பண பரிவர்த்தனைக்கும் கிராம மக்கள் இந்த வங்கியை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வங்கியில் பணம் இல்லை எனவும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை எனவும், வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் மட்டும் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

அதனால் நேற்று பணம் கிடைக்கும் என அதிகாலை 5 மணியளவில் பொதுமக்கள் வங்கியின் முன்பாக வரிசையில் நின்றனர். சிலர் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தனர். ஆனால் ஏ.டி.எம். மையம் திறக்கப்படவில்லை. பணம் இல்லாததால் ஏ.டி.எம். மையம் திறக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

கடந்த 2 நாட்களாக வங்கியில் பணம் வழங்கப்படாததாலும், ஏ.டி.எம். மையத்தில் பணம் இல்லாததாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கியின் முன்பாக செங்கம்–நீப்பத்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த வழியாக வந்த தனியார் பஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஷாஜிதா, மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வங்கியில் பணம் வழங்க வங்கி மேலாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களிடம் கூறினார்கள். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் செங்கம்–நீப்பத்துறை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story