வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு


வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 15 Dec 2016 12:55 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். கலெக்டரிடம் மனு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழ

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கலெக்டரிடம் மனு

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மேபிள் தொண்டு நிறுவனத்தினருடன் சேர்ந்து விருதுநகர் கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இதுவரை 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்குகளில் போலீசார் இதுவரை எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் 10 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளிலும், ஆதிதிராவிடர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்ட வழக்குகளிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து அரசு தரப்பில் ஆஜராக மூத்த வக்கீல்களை நியமிக்க வேண்டும்.

நிவாரணம்

இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை நகலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அரசாணைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். இந்த வழக்குகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது அவர்களது வக்கீல்களுக்கோ அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சட்ட உதவி வழங்க வேண்டும்.

ஆய்வு கூட்டம்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது ஆய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு, ஆதிதிராவிடர் நல அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story