திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வக பரிசோதனையாளர்கள் அவசியம் கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவு


திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வக பரிசோதனையாளர்கள் அவசியம் கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:00 PM GMT (Updated: 15 Dec 2016 2:23 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியமர்த்தியிருக்க வேண்டும் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியமர்த்தியிருக்க வேண்டும் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள்

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு பற்றிய ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசியதாவது:–

குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைக்கு அருகிலும், குடியிருப்பு பகுதிகளுடனும் நேரடி தொடர்பு இருக்கும் வகையிலும் அமைய கூடாது. குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவாயில் தொற்று நீக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் தரைத்தளம், மேற்கூரை மற்றும் சுவர்கள் நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.

ஆய்வுக்கூடம்

தரை பகுதிகளை எளிதில் சுத்தம்செய்வதற்கு ஏற்ப கழிவுநீர் வாய்க்கால் இருக்க வேண்டும். ஜன்னல்களில் பூச்சிகள் நுழையாமல் இருக்க தடுப்பு வலைகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். போதுமான இடவசதியுடன் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். குடிநீர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களும் மற்றும் கொள்கலன்களும் துருப்பிடிக்காமலும் தொற்று நீக்கம் செய்யும் வகையிலும் இருக்க வேண்டும்.

குடிநீர் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. பணியாளர்கள் பணியை தொடங்கும் முன்பு தலைக்கவசம், கையுறை மற்றும் மேலங்கி ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் குடிநீரை சேமித்து வைக்கவும், பொட்டலமிடவும், வினியோகம் செய்யவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி நுண்ணுயிரியல் மற்றும் ரசாயன பகுப்பாய்வுகளை செய்வதற்கேற்ப ஆய்வுக்கூடம் வளாகத்தின் உட்பகுதியில் இருக்க வேண்டும். ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும்.

உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்

தயாரிக்கப்பட்ட குடிநீர் உரியமுறையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு மூடி உறையைக்கொண்டு சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வினியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்களின் எண்ணிக்கை, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ச் எண், ஆய்வக பரிசோதனை விவரம் மற்றும் வினியோகிக்கப்படும் நாள் முதலியவற்றை பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து குடிநீர் நிறுவனங்கள் உரிமத்தை உரிய காலத்துக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட நியமன அதிகாரி (உணவு பாதுகாப்புத்துறை) தமிழ்ச்செல்வன் மற்றும் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story