கணவர் இறந்ததால் வேதனை: குழந்தைக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


கணவர் இறந்ததால் வேதனை: குழந்தைக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T19:59:30+05:30)

கணவர் இறந்த வேதனை தாங்காமல் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– காதல் திருமணம் கோவை சின்னவேடம்பட்டி அத்திபாளையம்

கணபதி,

கணவர் இறந்த வேதனை தாங்காமல் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

காதல் திருமணம்

கோவை சின்னவேடம்பட்டி அத்திபாளையம் பிரிவை சேர்ந்தவர் சக்தி. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனா (வயது 24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரஷ்னி என்ற 1 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சக்தி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் சாவுக்குதான் தான் காரணம் என்று எண்ணிய கீர்த்தனா, மனவேதனையில் இருந்தார். அவருக்கு அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இருப்பினும் கீர்த்தனா யாருடனும் சரிவர பேசாமல் சோகமாகவே காணப்பட்டார்.

குழந்தைக்கு விஷம் கொடுத்தார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று குழந்தைக்கு சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து கொடுத்துவிட்டு, கீர்த்தனாவும் குடித்தார். இதனால் சிறிது நேரத்தில் தாயும், குழந்தையும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கீர்த்தனாவையும், குழந்தையையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கீர்த்தனா பரிதாபமாக இறந்தார். குழந்தை ரஷ்னிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடிதம் சிக்கியது

இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கீர்த்தனா வீட்டிற்கு சென்று போலீசார் சென்று சோதனை நடத்தியதில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில், ‘எனது காதல் கணவர் இறந்ததால் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியவில்லை. என் குழந்தையை மட்டும் தனியாக விட்டு செல்லவும் எனக்கு மனமில்லை. எனவே சாணிப்பவுடரை கரைத்து குழந்தைக்கு கொடுத்துவிட்டு, நானும் குடித்து தற்கொலை செய்துகொண்டேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’. இவ்வாறு அந்த கடிதத்தில் கீர்த்தனா உருக்கமாக எழுதி இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் கணவர் இறந்த துக்கத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, இளம்பெண்ணும் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story