ஆட்டைக்கடித்து கொன்றது வால்பாறையில் ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலிகள் போலீசார் விடிய விடிய ரோந்து


ஆட்டைக்கடித்து கொன்றது வால்பாறையில் ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலிகள் போலீசார் விடிய விடிய ரோந்து
x
தினத்தந்தி 15 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-15T20:06:15+05:30)

வால்பாறையில் நள்ளிரவில் ஊருக்குள் சிறுத்தைப்புலிகள் சுற்றித்திரிந்தன. மேலும், சிறுத்தைப்புலி ஒன்று ஆட்டை கடித்துக் கொன்றது. பாதுகாப்புக்காக விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா வால்பாறை நகரை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும் அ

வால்பாறை,

வால்பாறையில் நள்ளிரவில் ஊருக்குள் சிறுத்தைப்புலிகள் சுற்றித்திரிந்தன. மேலும், சிறுத்தைப்புலி ஒன்று ஆட்டை கடித்துக் கொன்றது. பாதுகாப்புக்காக விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கேமரா

வால்பாறை நகரை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும் அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளது. சமீப காலமாக ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை நகருக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த மாத இறுதியில் நள்ளிரவு நேரத்தில் வால்பாறை– பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் வங்கி முன்பு நின்றிருந்த ஒரு பூனையை சிறுத்தைப்புலி ஒன்று துரத்தி பிடித்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

ஆட்டைக்கடித்துக் கொன்றது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் அதே பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி ஒன்று வந்துள்ளது. அங்கு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருக்கு சொந்தமான ஆடுகள் நின்றன. அப்போது சிறுத்தைப்புலி ஒரு ஆட்டை கடித்து ரத்தத்தை குடித்துவிட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டது.

தற்போது பணத்தட்டுப்பாடு காரணமாக நள்ளிரவு நேரத்திலும் ஏ.டி.எம்.–ல் பணம் எடுக்க பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் வால்பாறை நகர் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் விடிய விடிய பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்கிறார்கள். எனவே போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நகருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள சண்முகா எஸ்டேட் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்ற தோட்ட அதிகாரி மோட்டார் சைக்கிளில் வால்பாறையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.–ல் பணம் எடுக்க சென்று கொண்டு இருந்தார்.

அவர் கருமலை எஸ்டேட் ரோட்டில் சென்றபோது அங்கு 2 சிறுத்தைப்புலிகள் நின்றுகொண்டு இருந்தன. ரோட்டில் சிறுத்தைப்புலிகள் நிற்பதை பார்த்து சின்னப்பன் செய்வது அறியாது திகைத்தார். பின்னர் சூதாரித்து கொண்ட அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று உயிர் தப்பினார்.

அந்த நேரத்தில் வாட்டர்பால்ஸ் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது 2 சிறுத்தைப்புலிகளும் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்துவிட்டன. இதையடுத்து போலீசார் வால்பாறை– பொள்ளாச்சி மெயின்ரோடு பகுதிக்கு சென்றபோது வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மெயின் ரோட்டை கடந்து சிறுத்தைப்புலி ஒன்று சிறுவர் பூங்கா பகுதிக்குள் சென்றது.

விடிய விடிய ரோந்து வந்த போலீசார்

அந்த பகுதியில் பொதுமக்கள் வெளியே வந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் விடிய விடிய காலை 7 மணி வரை வால்பாறை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் மற்றும் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு, வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story