குளத்தூர் அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதல்; 12 பேர் கைது


குளத்தூர் அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதல்; 12 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2016 7:30 PM GMT (Updated: 15 Dec 2016 2:44 PM GMT)

குளத்தூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளத்தூர்,

குளத்தூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் சில்மிஷம்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் என்ற கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி. இவருடைய மகன் மணிமுத்து (வயது 29). கூலி தொழிலாளி. இவர், மனைவியுடன் குளத்தூர் அருகே உள்ள வைப்பார் பள்ளிவாசலில் நடந்த சந்தனக்கூடு விழாவுக்கு சென்றார். அங்குள்ள வளையல் கடையில் அவருடைய மனைவி சில பொருட்களை வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை முஸ்லிம் நடு தெருவைச் சேர்ந்த அபுபக்கர் காசிம் மகன் அகமது ஷேக் மைதீன் (20) என்பவர் முத்துமணியின் மனைவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட அகமது ஷேக் மைதீனை தாக்கினார். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

கோஷ்டி மோதல்

அப்போது அகமது ஷேக்மைதீன், நண்பர்கள் 8 பேருடன் காரில் மணிமுத்து தம்பதியை பின்தொடர்ந்து விரட்டி சென்றார். இதை கவனித்த மணிமுத்து, செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். குளத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் கார் சென்றபோது, மணிமுத்துவின் உறவினர்களான கோட்டைமேட்டைச் சேர்ந்த வீரபாண்டியன் மகன் பாலமுரளி (25), சரவணன் (25) ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். உடனே மணிமுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

பின்னர் மணிமுத்து, பாலமுரளி, சரவணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து காரின் கண்ணாடியை உடைத்தனர். அங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மோதலை தடுத்து நிறுத்தினர்.

12 பேர் கைது

இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமுத்து அளித்த புகாரின்பேரில், அகமது ஷேக் மைதீன், அருப்புகோட்டை சின்ன தெருவைச் சேர்ந்த அப்துல் அக்பர் மகன் தமீம் அன்சாரி (28), ஜாகீர் உசைன் மகன் பக்கீர் ஒலி (23), அப்துல் பாசித் (19), குளத்தூர் அருகே வடமலை சமுத்திரம் பூசனூரைச் சேர்ந்த சிக்கந்தர் பாபா மகன் மன்சூர் அலிகான் (21), ஜாஹிமா மைதீன் மகன் தமிமுன் அன்சாரி (18), செய்யது முகமது மகன் ஆசிப் (19), அப்துல் காஜா மகன் ஷேக் மற்றும் 17 வயது வாலிபர் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அகமது ஷேக் மைதீன் அளித்த புகாரின்பேரில், மணிமுத்து, பாலமுரளி, சரவணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story