சேத மதிப்பீடு கணக்கெடுப்பு பணியை 18–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் உதவி கலெக்டர் உத்தரவு


சேத மதிப்பீடு கணக்கெடுப்பு பணியை 18–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் உதவி கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T00:17:38+05:30)

வேலூர் உள்பட 5 தாலுகாக்களில் வார்தா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணியை வருகிற 18–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உதவி கலெக்டர் உத்தவிட்டுள்ளார். இழப்பீடு வழங்க வேண்டும் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத

வேலூர்,

வேலூர் உள்பட 5 தாலுகாக்களில் வார்தா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணியை வருகிற 18–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உதவி கலெக்டர் உத்தவிட்டுள்ளார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது வார்தா புயலால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும்போது ஒரு விவசாயிகூட விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். ஒரு வாழை மரத்துக்கு ரூ.200 இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ரேஷன் அரிசி

மேலும் காடு வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகள் வனப்பகுதியில் மேய்க்கப்படுவதால் வனத்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. எனவே வனத்துறையுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியின் காரணமாக மானாவரி பயிர்களுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

குடியாத்தம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மூட்டைகள் எடைகுறைவாக இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது. மாதம் 400 மூட்டை அரிசி குறைகிறது. எனவே அரிசி மூட்டை எடைகுறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

18–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்

இதற்கு பதில் அளித்த உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் பேசுகையில், ‘வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய 5 தாலுகாக்களில் புயல் பாதிப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அவர்கள் கணக்கெடுக்க சென்ற கிராமம், நேரம் ஆகியவற்றை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாரம் சேத மதிப்பு பற்றிய கணக்கெடுப்புதான் முக்கிய பணியாகும். வருகிற 18–ந் தேதி மாலைக்குள் புயல் சேதங்களை கணக்கெடுத்து ஒப்படைக்கவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.


Next Story