திட்டக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கார், வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திட்டக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கார், வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 15 Dec 2016 7:12 PM GMT)

திட்டக்குடி, திட்டக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கார் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியர் திட்டக்குடி அடுத்த ரா

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கார் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியர்

திட்டக்குடி அடுத்த ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகே வசிப்பவர் அய்யப்பன் (வயது35). இவர் பெண்ணாடத்தில் உள்ள வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா, பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து வேலை முடிந்ததும் மாலையில் விஜயா வீடு திரும்பினார். அப்போது அவர் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

வெள்ளி பொருட்கள்

இதுகுறித்து அய்யப்பன் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அய்யப்பன் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் நிறுத்தி வைத்திருந்த காரையும் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டுப் போன கார் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் அந்த வீட்டின் பின்பக்கம் சென்று கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story