துணை நிறுவனம் அமைக்க எதிர்ப்பு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்


துணை நிறுவனம் அமைக்க எதிர்ப்பு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:14:37+05:30)

துணை நிறுவனம் அமைக்க எதிர்ப்பு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரி,

துணை நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பிரித்து செல்போன் கோபுர சேவைக்கு தனியாக துணை நிறுவனம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு துணை நிறுவனம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், பி.எஸ்.என்.எல். பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையில் நடந்த போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியம், செல்வரங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், சதாசிவம், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அலுவலகம் மூடிக்கிடந்தது

இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் மூடிக் கிடந்தது. அலுவலகத்தின் முன்பு நேற்று காலை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story