குறைவாக பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு: செம்மான்விளையில் வங்கியை பொதுமக்கள் முற்றுகை


குறைவாக பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு: செம்மான்விளையில் வங்கியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:16:04+05:30)

குறைவாக பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு: செம்மான்விளையில் வங்கியை பொதுமக்கள் முற்றுகை

நித்திரவிளை,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே செம்மான்விளை பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியகோடு, மங்காடு, வாவறை, அதங்கோடு, தையாலுமூடு, வாறுதட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து இங்குள்ள வங்கியில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பிட்ட தொகை மட்டும் வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவு படி நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே சில நாட்களாக தொடர் விடுமுறை வந்ததால் பொதுமக்கள் வங்கியில் பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று செம்மான்விளை வங்கியில் பணம் எடுக்க ஏராளமானோர் காலையில் திரண்டனர். அப்போது வாடிக்கையாளர்களிடம் வங்கியில் ரூ.2 லட்சம் மட்டும் கையிருப்பாக உள்ளதால் நபர் ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறைவாக பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கியை முற்றுகையிட்டும், வங்கி முன் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது வங்கிக்கு மேலும் ரூ.8 லட்சம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story