மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு, மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்


மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு, மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 15 Dec 2016 9:46 PM GMT)

மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு, மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்

நாகர்கோவில்,

மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு, மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் பேசினார்.

கிறிஸ்துமஸ் விழா

நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி தலைவர் பொன்.ராபர்ட்சிங் தலைமை தாங்கினார். கல்லூரி டீன் மற்றும் ஆலோசகரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான காளியப்பன், கல்லூரி ஆலோசகரும், முன்னாள் ஐ.ஜி.யுமான செண்பகராமன், கல்லூரி இயக்குனர் அருள்சன் டேனியல், கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவிகள் ஐஸ்வர்யா, ஜெனி சவுமியா வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் தவத்திரு சுவாமி பத்மேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் பேசுகையில் கூறியதாவது:-

பக்தி, விஞ்ஞான வாழ்க்கை

பக்தி, விஞ்ஞான வாழ்க்கை வாழ மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் விவாகரத்து வழக்குகள் பெருகி விட்டன. அதிலும் படித்த காதல் திருமணம் செய்தவர்கள் விவாகரத்துக்காக நீதிமன்றம் வருகின்றனர். பொறுப்பின்மையை தான் இது காட்டுகிறது. விட்டுக் கொடுத்து திருமண வாழ்க்கை வாழ வேண்டும். படிப்பு மட்டும் போதாது, வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கருணை, அன்பு, பொதுநலம் மற்றும் மனிதாபிமானம் தேவைப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் அதிகளவில் இருசக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன. அதிவேகமாக வாகனத்தை ஓட்டி கல்லூரி மாணவர்கள் விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். குமரி மாவட்டத்தில் இளம் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகின்ற கொடும் செயல்கள் நடந்து வருகிறது.

மாணவ-மாணவிகள் மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். பெரியவர்கள் மற்றும் தாய், தந்தையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பரிசு

இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள், பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு, பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு ரொக்க பரிசுகளையும் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி பிருந்தா நன்றி கூறினார்.

Next Story