தஞ்சையில் 3 டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


தஞ்சையில் 3 டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Dec 2016 12:15 AM GMT (Updated: 2016-12-16T03:18:58+05:30)

தஞ்சையில் 3 டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விற்பனையாளர் மீது தாக்குதல் தஞ்சையை அடுத்த நடுக்காவேரி கிராமம் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்

தஞ்சையில் 3 டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விற்பனையாளர் மீது தாக்குதல்

தஞ்சையை அடுத்த நடுக்காவேரி கிராமம் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகுமார்(வயது41). இவர் தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமாலை 3 பேர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து 180 மி.லிட்டர் அளவுள்ள மதுபாட்டிலை வாங்கினார். பின்னர் மற்றொருவர் மது வாங்குவதற்காக 100 ரூபாய் கொடுத்தார். இதை ராஜகுமார் வாங்கியபோது, திடீரென அவர்கள் டாஸ்மாக் கடை கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகுமார் அவர்களை கடையை விட்டு வெளியே தள்ளியபோது அவரை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன் மதுபாட்டிலால் அடித்து கீழே தள்ளினர்.

போலீஸ் விசாரணை

பின்னர் கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 760–யை கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பணம் கொடுக்காமல்

அதேபோல தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார்(39) என்பவர் தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமதியம் 3 பேர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அவர்கள் 3 பீர்பாட்டில்கள், 2 மதுபாட்டில்களை வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். மாலை நேரத்தில் அதே 3 பேர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்யி பணம் கொடுக்காமல் மதுபாட்டில்களை கேட்டனர். ஆனால் மதுபாட்டில்களை கொடுக்க சசிகுமார் மறுத்ததுடன் மதியம் வாங்கிய மதுபாட்டில்களுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டார்.

அப்போது 3 பேரும் டாஸ்மாக் கடை கதவை தள்ளி கொண்டு கடைக்குள் நுழைந்தனர். அவர்களை தடுத்த சசிகுமாரை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.44 ஆயிரத்து 510–யை கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இவர்கள் 3 பேரும் 20 வயது முதல் 25 வயதுடையவர்கள் ஆவர்.

டாஸ்மாக் அதிகாரிகள்

2 டாஸ்மாக் கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவத்தை அறிந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமு, உதவி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா, தெற்கு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமு தெரிவித்தார்.

அதேபோல தஞ்சை எம்.கே.மூப்பனார்சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பூதலூரை சேர்ந்த பாலசுந்தரம்(40) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு நேற்று இரவு 9.15 மணி அளவில் வாள் மற்றும் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் கடையில் இருந்து விற்பனையாளர் பாலசுந்தரத்திடம் வாளை காண்பித்து மிரட்டி பணத்தை கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் பாலசுந்தரத்தின் தலையில் வாளால் வெட்டி விட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு வெளியே வந்தனர். அப்போது மதுபானபாரில் இருந்து மது அருந்தி விட்டு வெளியே வந்தவர்களை மிரட்டி உள்ளே அனுப்பி விட்டு, மதுபான பாரின் கதவை இழுத்து பூட்டிவிட்டு, மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காயம் அடைந்த பாலசுந்தரத்தை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த டாஸ்மாக் கடையில் கொள்ளை போது ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த 3 சம்பவங்கள் குறித்து தஞ்சை தாலுகா, தெற்கு, கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த 3 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story