ஆவுடையார்கோவில் பகுதியில் போதிய மழை இல்லாததால் விளை நிலங்களில் ஆடு-மாடுகள் மேயும் அவலநிலை நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


ஆவுடையார்கோவில் பகுதியில் போதிய மழை இல்லாததால் விளை நிலங்களில் ஆடு-மாடுகள் மேயும் அவலநிலை நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:19:38+05:30)

ஆவுடையார்கோவில் பகுதியில் போதிய மழை இல்லாததால் விளை நிலங்களில் ஆடு-மாடுகள் மேயும் அவலநிலை நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் பகுதியில் போதிய மழை இல்லாததால் விளை நிலங்களில் ஆடு-மாடுகள் மேயும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருகிய நெல் பயிர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏரிகள் அதிகம் உள்ளதால், விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதியில் நெல் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஏரியில் தண்ணீர் இல்லை. இதனால், ஏரி விவசாயம் இல்லாத பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். அப்போது ஓரிரு நாட்கள் பெய்த மழையால் பயிர்கள் முளைத்திருந்தது. இதனால் விவசாயிகள் பயிர்களில் களை கொல்லி மருந்து அடித்து, பின்னர் களை எடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் போதிய மழை பெய்யாததால் சில இடங்களில் பயிர்கள் கருகியது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் நெல் விதைப்பு செய்தனர். தொடர்ந்து இந்த பயிர்கள் முளைத்தது. ஆனால் போதுமான அளவு மழை பெய்யாததால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், இனி மழை பெய்ய வாய்ப்பு இல்லை, அப்படி மழை பெய்தாலும் கருகிய பயிர்கள் மீண்டும் முளைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதி வயலில் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், நாங்கள் கடன் வாங்கி தான் இந்த முறை நெல் விதைப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் தற்போது மழையில்லாமல் விதைப்பு செய்த பயிர்கள் கருகி விட்டன. இதனால் நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். விவசாயத்திற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை. எனவே மழையில்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

Next Story