பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கருகிய மக்காச்சோள பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கருகிய மக்காச்சோள பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T03:20:05+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கருகிய மக்காச்சோள பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கருகிய மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடி

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பயிரான மக்காச்சோளம் ஆண்டுதோறும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 2015-16-ம் நிதிஆண்டில் மக்காச்சோளம் 54 ஆயிரத்து 241 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி அதிக எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பருத்திக்கு உரிய விலை கிடைக் காததாலும், பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததாலும், பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் இருந்து மக்காச்சோளம் சாகு படிக்கு மாறி வருகின்றனர்.

பருவமழை பொய்த்ததால்...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் மானாவாரியாக இருப்பதாலும், மக்காச்சோளத்திற்கு பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும் பெருமளவு விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடிக்கு மாறிவந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்காக மக்காச்சோளம் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால், வேப்பந்தட்டை, வேப்பூர் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாயிகள் சி.பி.தானியா உள்ளிட்ட பல்வேறு ரக மக்காச்சோளங்களை ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நவம்பர் மாதம் வரை 49 ஆயிரத்து 266 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் மழையை நம்பி மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

பயிர்கள் கருகின

பயிர்கள் கதிர் உருவாகும் சமயத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் மானாவாரி நிலங்களில் ஏறத்தாழ 48 ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் கருகிவிட்டன. கிணற்றுப்பாசனத்தில் சுமார் 650 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மட்டும் முழுமையான சாகுபடியை தரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இனி அதிர்ஷ்டவசமாக மழை பெய்தாலும் மக்காச்சோள பயிர்களை காப்பாற்ற முடியாத பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். முந்தைய எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் மக்காச்சோள சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழை காலத்திலும் கூட வறட்சி நிவாரணம் கேட்கும் துரதிர்ஷ்டவசமான நிலைக்கு மக்காச்சோள சாகுபடி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட விவசாய சங்கங் களின் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story