அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்த வேண்டும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்த வேண்டும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:22:20+05:30)

அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்த வேண்டும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர்,

அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலம் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்து தீர்மானங்களை வாசித்தார்.

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மருதராஜா எம்.பி., மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசாராம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர்), கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) உள்பட மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சசிகலா வழிநடத்த வேண்டும்

1½ கோடிக்கு மேலான உறுப்பினர்களையும், இந்தியாவின் 3-வது பெரிய அரசியல் இயக்கமாக உருவாக்கி பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களை கொண்ட மாபெரும் இயக்கமாக அ.தி.மு.க.வை வளர்ச்சி அடைய செய்த ஜெயலலிதா மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்்தி அடைய இறைவனை வேண்டுகிறது.

இயக்க தொண்டர்கள் எதிர்பார்க்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஜெயலலிதாவுடன் 36 ஆண்டுகளாக உற்றதுணையாக இருந்து வந்துள்ள சசிகலா ஏற்று கழகத்தை வழிநடத்த பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அழைப்பு விடுத்து ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, கட்சிப் பணியை கட்டுப்பாட்டுடன் ஆற்றியதுபோல அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் சசிகலா தலைமையின் கீழ் விசுவாசமாக செயல்பட்டு, இயக்க வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவது, எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தீவிர களப்பணியாற்றி அ.தி.மு.க.விற்கு வெற்றிகளை பெற்றுத்தருவது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story